ஆரோக்யம்

சத்துடன் குளிர்ச்சி அளிக்கும் கேழ்வரகு கூழ்

கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.

கேழ்வரகுவில் க்ளூட்டன் என்ற புரதம் கிடையாது. பால், க்ளூட்டன் போன்றவைகளின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒன்று கேழ்வரகு.

கேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகு மாவில் கூழ் செய்வது மிகவும் எளிது. முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த அரிசியில் கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

அடிப்பிடிக்க விடாது கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இப்படி முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடி நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து குடிக்கலாம்.

இந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்கறி குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.

கூழினால் கிடைக்கும் நன்மைகள்

கேழ்வரகை கூழாக மட்டுமின்றி தோசையாகவும், அடையாகவும், சப்பாத்தியாகவும் (சிறிது கோதுமை மாவுடன் சேர்த்து), இடியாப்பமாகவும் செய்தும் சாப்பிடலாம். கேழ்வரகுவில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் கேழ்வரகுவில் 344 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதனால் எலும்புகளுக்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு கேழ்வரகு. கேழ்வரகு கூழை புளிக்க வைக்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெறும் கேழ்வரகு மாவை கஞ்சியாக செய்து கொடுப்பதே பிறந்த குழந்தைகளுக்கான முதல் உணவாக இருக்கிறது.