அழகுக் குறிப்புகள்

வீட்டிலேயே தூய்மையான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் எளிய முறை!

'கோக்கனட் ஆயில்' சமையல், கூந்தல் வளர்ச்சி மற்றும் சருமப் பராமரிப்பிற்கு மிகவும் உகந்தது.

சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்களில் ரசாயனங்களும், வாசனைக் திரவியங்களும் கலக்கப்படுவதாக நுகர்வோர் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

இதனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையைப் பின்பற்றி, எந்தவித ரசாயனமும் இல்லாமல் வீட்டிலேயே 100% தூய்மையான தேங்காய் எண்ணெயை மிக எளிதாகத் தயாரிக்க முடியும் என இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் வழிகாட்டுகின்றனர்.

தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு

இதற்கு நன்றாக விளைந்த, முற்றிய தேங்காய்கள் மட்டுமே தேவைப்படும். முதலில் தேங்காய்களை உடைத்து, அதன் கீற்றுகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர், மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு, சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதை ஒரு சுத்தமான வெள்ளை பருத்தித் துணியில் கொட்டி, கைகளால் நன்றாகப் பிழிந்து அடர்த்தியான தேங்காய்ப் பாலை தனியாக ஒரு பாத்திரத்தில் பிரித்தெடுக்க வேண்டும்.

பாலை பதப்படுத்துதல்

பிழிந்து எடுக்கப்பட்ட தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி போட்டு இரவு முழுவதும் அல்லது சுமார் 10 முதல் 12 மணி நேரம் அப்படியே அசைக்காமல் வைக்க வேண்டும்.

இந்த நேரத்தில், பாலில் உள்ள அடர்த்தியான வெண்ணெய் போன்ற கொழுப்புப் பகுதி பாத்திரத்தின் மேல் அடுக்கிலும், தேவையற்ற நீர் பகுதி பாத்திரத்தின் அடியிலும் தனித்தனியாகப் பிரிந்துவிடும்.

கொழுப்பை பிரித்தல்

அடுத்த நாள் காலையில், மேலே படிந்திருக்கும் கெட்டியான வெள்ளை நிற தேங்காய் வெண்ணெய் அடுக்கை மட்டும் ஒரு கரண்டியால் மிக மெதுவாக வழித்து, தனியாக ஒரு சுத்தமான இரும்பு அல்லது கனமான கடாயில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடியில் தங்கியிருக்கும் தண்ணீரை முழுமையாகத் தவிர்த்துவிடுவது எண்ணெய் தயாரிப்பை எளிதாக்கும்.

எண்ணெய் காய்ச்சும் முறை

இப்போது, அந்த வெண்ணெய் உள்ள கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்க வேண்டும். வெப்பம் படரப் படர, அந்த வெண்ணெய் உருகி மெல்ல மெல்ல எண்ணெய் பிரியத் தொடங்கும்.

பாத்திரத்தின் அடியில் தங்கும் கசடு பகுதி பொன்னிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கசடு கருகிவிடாமல் சரியான பதத்தில் அடுப்பை அணைப்பது மிக முக்கியம்.

சேமிப்பும் பயன்களும்

எண்ணெய் நன்றாக ஆறியவுடன், அதனை ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றிச் சேமிக்கலாம். இந்த முறையில் தயாரிக்கப்படும் 'கோக்கனட் ஆயில்' சமையல், கூந்தல் வளர்ச்சி மற்றும் சருமப் பராமரிப்பிற்கு மிகவும் உகந்தது.

ரசாயனம் இல்லாத இந்தத் தூய எண்ணெய் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் வாசனையுடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

*முக்கிய குறிப்பு: நீங்கள் தேவைப்பட்டால் தேங்காய் உடன் உங்களுக்கு தேவைப்பட்ட பொருட்கள் சேர்த்துக்கொள்ளலாம்*.

SCROLL FOR NEXT