அழகுக் குறிப்புகள்

உங்களுக்கு புருவமே இல்லையா? புருவமுடி வளரவே மாட்டேங்குதா? அப்போ இது உங்களுக்குத்தான்..

அடிக்கடி த்ரெடிங் அல்லது பிளக்கிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அழகான, அடர்த்தியான புருவங்கள் முகத்தின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், பலருக்கும் புருவமுடி மிக மெலிதாக இருப்பது அல்லது புதிய முடிகள் வளராமல் இருப்பது பெரும் கவலையாக உள்ளது. இதற்காகப் பலரும் ரசாயனங்கள் நிறைந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்திப் பக்கவிளைவுகளைச் சந்திக்கின்றனர்.

இயற்கையான முறையில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே புருவமுடியை அடர்த்தியாக வளரச் செய்யலாம்.

விளக்கெண்ணெய்

புருவமுடி வளர்ச்சிக்குக் காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த இயற்கை மருந்து விளக்கெண்ணெய். இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் புருவத்தின் வேர்க்கால்களுக்குச் சென்று முடியின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

தினமும் இரவு தூங்குவதற்கு முன், சில துளிகள் விளக்கெண்ணெயை விரல் நுனியில் தொட்டு புருவங்களில் நன்றாக மசாஜ் செய்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சின்ன வெங்காயச் சாறு

வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான கந்தகச் சத்து, புருவப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது புதிய முடிகள் வேகமாக வளர உதவுகிறது.

ஒரு சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு பஞ்சின் உதவியோடு புருவங்களில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம் வெங்காய வாடை பிடிக்காதவர்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள ‘அலோனின்’என்ற வேதிப்பொருள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உடைவதைத் தடுக்கிறது. இது புருவத்தில் இருக்கும் வறட்சியை நீக்கி, முடியை மிருதுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றும்.

புதிய கற்றாழை மடலில் இருந்து ஜெல்லையும் மட்டும் தனியாக எடுத்து, புருவத்தில் மென்மையாகத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது ஒட்டும் தன்மை இல்லாததால் பகல் நேரங்களிலும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின்-ஏ

தேங்காய் எண்ணெயில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்-E ஆயில் இரண்டும் இணைந்து வேர்க்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், ஒரு வைட்டமின்-E காப்ஸ்யூல் எண்ணெயைக் கலந்து ஒரு சிறிய பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் புருவங்களில் தடவி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

செய்யக் கூடாதவை:

அடிக்கடி த்ரெடிங் அல்லது பிளக்கிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

புருவங்களின் மீது தேவையின்றி முகப்பவுடர் அல்லது அதிகப்படியான மேக்கப் கிரீம்களைத் தடவக் கூடாது. இது வேர்க்கால்களை அடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்கும்.