அழகுக் குறிப்புகள்

உங்க தலையில பொடுகு இருக்கா? இன்னைக்குத்தான் அதுக்கு கடைசி நாள்... இனி இருக்காது!

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரதச்சத்துக்கள் வறண்ட உச்சந்தலைக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது.

தினமும் தலையில் அரிப்பு தொல்லை, வெள்ளை வெள்ளையாய் செதில்கள் சிதறுகிறதா? இதன் காரணமாகத்தான் முடி கொட்டுகிறது என்ற சந்தேகமும் உங்களிடம் தோன்றுகிறதா? இந்த பிரச்சனைகள் இருப்பதால் வெளியே செல்வதற்கு கூச்சமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்.

முடி உதிர்வின் பின்னணியில் இருக்கும் 'சைலண்ட் கில்லர்' பொடுகு!

நம்மில் பலர் முடி கொட்டுவதற்குப் பல காரணங்களைத் தேடுகிறோம். ஆனால், அதற்கு மிக முக்கியக் காரணியாக இருப்பது இந்த பொடுகுதான்.

உச்சந்தலையில் ஏற்படும் வறட்சி அல்லது அதிகப்படியான எண்ணெய் பசை காரணமாக 'மலாசீசியா' என்ற பூஞ்சை தொற்று ஏற்பட்டு பொடுகு உருவாகிறது. இது வேர்க்கால்களை முற்றிலுமாகப் பலவீனப்படுத்தி, முடியை வேரோடு உதிரச் செய்கிறது.

எலுமிச்சை மற்றும் தயிர்..பொடுகை ஒழிப்பது எப்படி?

சந்தையில் விற்கப்படும் விலையுயர்ந்த கெமிக்கல் ஷாம்புகள் தராத அதிசயத்தை, இயற்கையான முறையில் இந்த எலுமிச்சை-தயிர் காம்பினேஷன் செய்து முடிக்கிறது.

எலுமிச்சம்பழச் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை உண்டாக்கும் கிருமிகளை வேரிலிருந்தே அழிக்கிறது. மேலும், இது தலையின் பிஹெச் அளவைச் சீராக வைக்கிறது.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரதச்சத்துக்கள் வறண்ட உச்சந்தலைக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இது பொடுகினால் ஏற்படும் கடுமையான அரிப்பைக் கட்டுப்படுத்துவதுடன், ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

20 நிமிட ஆன்டி-டான்ட்ரஃப் ஹேர் பேக்..

ஒரு சுத்தமான கிண்ணத்தில் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளவும். தலைமுடியை நன்றாகச் சிக்கெடுத்துவிட்டு, பாகங்களாகப் பிரித்து வேர்க்கால்களில் படும்படி இந்த கலவையை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

விரல் நுனிகளால் மென்மையாக 5 நிமிடங்களுக்கு லேசான மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைக்கவும். இறுதியாக, கெமிக்கல் இல்லாத ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகுக்கு குட் பாய் சொல்லிவிடலாம்.

சில முக்கிய வாழ்வியல் பழக்கங்கள்..

பொடுகுக்கு இன்னைக்கு கடைசி நாளாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் பயன்படுத்தும் சீப்பு, தலையணை உறைகள் மற்றும் டவல்களை இன்றே சுடுதண்ணீரில் போட்டு துவைத்துவிடுங்கள். இல்லையெனில், மீண்டும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. தலைக்குக் குளிக்கும் போது மிக அதிக சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது.

இது உச்சந்தலையை மேலும் வறட்சியாக்கி பொடுகை அதிகப்படுத்தும். லேசான வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும். வீட்டில் ஒருவருக்குப் பொடுகு இருந்தால், அவருடைய சீப்பையோ அல்லது துண்டையோ மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் பொடுகு அனைவருக்கும் பரவும்.

முக்கிய எச்சரிக்கை..

எலுமிச்சை சாற்றில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால், சளி, சைனஸ், ஆஸ்துமா அல்லது ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த பேக்கை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும் பயன்படுத்தினால் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். மேலும், உச்சந்தலையில் ஏற்கனவே காயம் அல்லது வெட்டுக்கள் இருந்தால் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.