இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்வியல் முறை, போதிய தண்ணீர் குடிக்காதது, மற்றும் தரம் குறைந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் பலருக்கும் உதடுகள் தங்களின் இயற்கை நிறத்தை இழந்து கருமையாக மாறுகின்றன.
இதனால் முகத்தின் பொலிவே குறைகிறது. கெமிக்கல் கலந்த க்ரீம்களைத் தவிர்த்து, சமையலறையில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே மிக எளிதாக உதடுகளை ரோஸ் நிறத்திற்கு மாற்ற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
உதடுகளின் கருமையைப் போக்கி, உடனடியாக இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதில் பீட்ரூட்டிற்கு நிகர் எதுவுமில்லை. பீட்ரூட்டில் உள்ள இயற்கையான நிறமிகள் உதட்டின் செல்களைப் புதுப்பிக்கின்றன.
பயன்படுத்தும் முறை: ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தினமும் இரவு தூங்குவதற்கு முன், இந்த சாற்றை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் குளிர்ந்த நீரால் கழுவினால் சில நாட்களிலேயே உதடு இயற்கையாகவே சிவப்பாவதை நீங்கள் காண முடியும்.
உதடுகளில் தேங்கும் இறந்த செல்கள் தான் உதடு கருமையாகக் காட்சியளிக்க முதன்மைக் காரணம். இதனை நீக்க வாரத்திற்கு இரண்டு முறை ஸ்க்ரப் செய்வது அவசியமாகும்.
பயன்படுத்தும் முறை: அரை ஸ்பூன் சர்க்கரையுடன், சில துளிகள் சுத்தமான நெய் அல்லது வெண்ணெய் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உதட்டின் மீது வைத்து 2 நிமிடங்களுக்கு மென்மையாக வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இது உதட்டில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வறண்ட தோலை நீக்கி, மென்மையாக்க உதவும்.
எலுமிச்சம்பழத்தில் இயற்கையான பிளீச்சிங் பண்புகள் நிறைந்துள்ளன. தேன் உதட்டிற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி சுருக்கங்களை நீக்குகிறது.
பயன்படுத்தும் முறை: சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் சுத்தமான தேனை ஒன்றாகக் கலந்திடுங்கள். இக்கலவையை உதடுகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எலுமிச்சை உதட்டின் கரும்புள்ளிகளை நீக்கி, தேன் உதட்டைப் பளபளப்பாக மாற்றும்.
மாதுளை பழத்தின் விதைகள் உதட்டின் நிறமியைக் கட்டுப்படுத்தி, உதடுகள் மீண்டும் கருமையாவதைத் தடுக்கிறது. பாலாடை உதட்டின் வெடிப்புகளைக் குணமாக்குகிறது.
பயன்படுத்தும் முறை: சில மாதுளை விதைகளை நன்றாக நசுக்கி, அதனுடன் சிறிதளவு பாலாடை சேர்த்துக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதடுகளில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், உதடுகள் பட்டுப் போல சாஃப்ட் ஆக மாறுவதுடன், நல்ல நிறத்தையும் பெறும்.
உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், அவை எளிதில் வறண்டு கருமையாகி விடுகின்றன. பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின்-இ உதட்டிற்குப் புத்துயிர் அளிக்கிறது.
பயன்படுத்தும் முறை: தினமும் இரவு தூங்குவதற்கு முன் இரண்டு துளிகள் தூய்மையான பாதாம் எண்ணெயை எடுத்து உதடுகளில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இது உதட்டின் வறட்சியைத் தடுத்து, கரிய நிறத்தை படிப்படியாகக் குறைத்து, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்.