அழகுக் குறிப்புகள்

முகப்பருக்களைத் தூண்டும் உணவுகள் – இன்றே தவிர்த்து விடுங்கள்!

சாக்லேட் சாப்பிடுவதால் முகப்பருக்கள் அதிகமாகும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் மிகப்பெரிய அழகியல் கவலையாக இருப்பது முகப்பருக்கள். என்னதான் விலையுயர்ந்த ஃபேஸ் வாஷ், கிரீம்களைப் பயன்படுத்தினாலும் முகப்பருக்கள் குறையவில்லை என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால், நீங்கள் சாப்பிடும் உணவு முறையில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

சருமப் பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் உட்கொள்ளும் சில உணவுகள் உடலின் ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையை சுரக்கச் செய்து முகப்பருக்களைத் தூண்டுகின்றன.

பால் மற்றும் பால் பொருட்கள்..

பால் ஆரோக்கியமானது என்றாலும், முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு எதிரியாக மாற வாய்ப்புள்ளது. பாலில் இயற்கையாகவே உள்ள சில ஹார்மோன்கள் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள், நமது சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி பருக்களைத் தூண்டுகின்றன.

உங்களுக்குக் கடுமையான முகப்பரு இருந்தால், சில வாரங்களுக்குப் பால், சீஸ் மற்றும் பன்னீர் போன்றவற்றைத் தவிர்த்துப் பாருங்கள்.

சர்க்கரை மற்றும் இனிப்புப் பொருட்கள்..

சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள், கேக், மற்றும் குளிர்பானங்களில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இவற்றை நாம் சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சட்டென்று உயர்கிறது.

இதனால் இன்சுலின் அளவு அதிகரித்து, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை அதீதமாக வேலை செய்யத் தூண்டுகிறது. இதன் விளைவாக முகம் முழுவதும் பருக்கள் பரவத் தொடங்குகின்றன.

துரித உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்ஸ்..

பீட்சா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த சமோசா, சிப்ஸ் போன்ற துரித உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மைதா அதிகளவில் உள்ளன.

இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, முகப்பருக்களை உருவாக்குவதுடன், ஏற்கனவே இருக்கும் பருக்களைப் பழுத்து உடையச் செய்யும் அளவிற்கு நிலைமையைக் மோசமாக்குகின்றன.

சாக்லேட் மற்றும் கோகோ பொருட்கள்..

சாக்லேட் சாப்பிடுவதால் முகப்பருக்கள் அதிகமாகும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, அதிக சர்க்கரை மற்றும் பால் கலந்த 'மில்க் சாக்லேட்டுகள்' சருமத்தில் பாக்டீரியா தொற்றுகளை எளிதாக்குகின்றன.

சாக்லேட் பிரியர்கள் மில்க் சாக்லேட்டுகளுக்குப் பதிலாக, குறைந்த அளவு சர்க்கரை கொண்ட 'டார்க் சாக்லேட்டுகளை' அளவோடு சாப்பிட்டு வந்தால் நல்லது.

அதிக காரம் மற்றும் மசாலா உணவுகள்..

அதிகப்படியான காரம், மசாலா மற்றும் வினிகர் சேர்க்கப்பட்ட உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கின்றன. இதனால் முகம் மற்றும் முதுகுப் பகுதிகளில் சிவப்பு நிறத்திலான வீக்கத்துடன் கூடிய பருக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

பருக்கள் இல்லாத பளிங்கு போன்ற சருமத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடித்து உடலை நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும்.

கீரைகள், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நட்ஸ் மற்றும் தானியங்களைச் சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்கும் நல்லது.