வெற்றி என்பதை நாம் பல வகைகளில் எடுத்து கொள்ளலாம். வெற்றி என்பது சிலருக்கு செல்வமாகும். சிலருக்கு சமூக அங்கீகாரமாகும். சிலருக்கு சந்தோஷமான வாழ்க்கையாகும். சிலருக்கு நோயற்ற வாழ்வும், மன நிம்மதியுமே வெற்றியாகும். பொதுவாக வெற்றி என்பது ஒரு நல்ல செயலின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்றே எடுத்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை விட அப்படி ஒன்றும் பிரமாதமான திறமை படைத்தவர்கள் இல்லை. அவர்கள் வெற்றி பெற தோல்வி அடைந்தவர்களும் காரணமாகிறார்கள். ஆனால் தோல்விகள் நிரந்தரமில்லை. ‘நாமும் ஜெயிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.
இன்று வாழ்க்கையில் பலர் பலவிதமான அவமானங்களை சந்திக்கின்றனர். அதை சகிக்க முடியாமல் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். அவமானத்தை அவமானமாக எடுத்து கொள்ளாமல் லட்சியத்தை அடைவதற்கான வெறியாக மாற்றிக் கொள்ள வேண்டும். கிரேக்க நாட்டில் ஒரு சிறுவன் ‘திக்குவாயன்’ என்று அவமானப்படுத்தப்பட்டான்.
பேச்சுப்போட்டியில் கலந்த அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் ஏளனம் செய்தனர். அப்போது அவனுக்குள் ஒரு வெறி பிறந்தது. கூழாங்கற்களை வாயில் போட்டு பேசிப் பழகு என்று அவன் தாய் சொன்னபடி செய்தான். நாளடைவில் அவன் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. வார்த்தைகள் சரளமாக வந்தன. சொற்பொழிவில் ஒரு கவர்ச்சி இருந்தது. கூட்டம் கூடியது. உலக புகழ்பெற்ற பேச்சாளர் ஆனார். அவர்தான் டெமாஸ்தனிஸ் என்ற பேச்சாளர். அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்.
எப்போதும் தன்னம்பிக்கை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது. மருத்துவமனையில் உள்ள நோயாளியை நண்பர்களும், உறவினர்களும் சென்று பார்க்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டத்தான். மிகவும் கடுமையான வியாதியாக இருந்தாலும் மற்றவர்கள் கொடுக்கும் ஆறுதலால் அந்த வியாதி பாதியாக குறைந்துவிடும். வெற்றி வாய்ப்புகள் ஒவ்வொருவரின் சிந்தனையிலும் உருவாகத்தான் செய்கின்றன. அதை செயல்படுத்த பொருளாதாரமும், ஊக்கப்படுத்த உறவினர்களும், நண்பர்களும் வேண்டும். சாத்தியங்களை சிந்திப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை நாம் உருவாக்க முடியும்.
-மு.மாரிமுத்துசெல்வன், நெல்லை