பொது இடங்களில் விற்கும் பாட்டில் தண்ணீரின் தூய்மையை அறிவது உண்மையில் கடினம்தான். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் எண் போன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்காது. உரிய விவரங்கள் உள்ள பாட்டில் தண்ணீரைப் பார்த்து வாங்குங்கள்.
பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது. இரண்டு நாட்கள் வரை கிருமிகள் வளராது. 3 நாட்களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம்பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்புண்டு. எனவே, குழாயில் பிடித்ததும் வடிகட்டி 20 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது.
பாட்டிலில் அடைக்கப்பட்டக் குடிநீர் பாட்டிலின் மூடியைத் திறந்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஏனெனில், பாட்டிலில் தண்ணீர் அடைக்கப்பட்ட பிறகு, ஏற்படும் கிருமித் தொற்றை அழிக்கவல்ல கிருமி நாசினி இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளைகள்கூடக் கிருமித்தொற்றுக்கு வழிவகை செய்துவிடும்.
கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரைக் கலப்பதும், நீரைக் கொதிக்கவைக்காமல் வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளரவைக்கும்.! வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிகளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.