சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெண்கள் நல சிறப்பு மருத்துவரிடம் கேட்டபோது, "பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது" என்கிறார்.
"சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.