பொது மருத்துவம்

மஞ்சள் காய்ச்சல்: ஆரம்ப அறிகுறிகளை அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?

மஞ்சள் காய்ச்சலுக்கு நேரடியாகக் குணப்படுத்தும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை.

மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்பாகும். இது முக்கியமாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் காரிபியன் பகுதிகளின் சில இடங்களில் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்.

நோய் பரவும் முறை

பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது இந்நோய் பரவுகிறது. வைரஸைக் கடத்தும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. இவை நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய இரண்டிலும் காணப்படுகின்றன. மஞ்சள் காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகத் தொடுதல் மூலமாகவோ நெருங்கிய தொடர்பின் மூலமாகவோ பரவாது. தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

முதல் கட்ட அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல், தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, தசை வலி, கடுமையான முதுகுவலி மற்றும் பசியின்மை.

இந்த ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக 3 முதல் 4 நாட்களுக்குள் சரியாகிவிடும். பெரும்பாலோர் இதிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிடுவார்கள்.

இரண்டாம் கட்டம் மிகவும் ஆபத்தானது

பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேருக்கு நோய் தீவிரமடைகிறது. மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு, வாய், மூக்கு, கண்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் ரத்தப்போக்கு ஏற்படுதல் போன்றவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும். தீவிர நிலை அடையும் நோயாளிகளில் பாதி பேர் உயிரிழக்கக் கூடும்.

மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும்

மஞ்சள் காய்ச்சல் பரவும் பகுதிகளுக்குப் பயணம் செய்தாலோ அல்லது அங்கு சென்று திரும்பிய சில நாட்களிலோ அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரத்த பரிசோதனை மூலம் இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. மஞ்சள் காய்ச்சலுக்கு நேரடியாகக் குணப்படுத்தும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். தடுப்பூசி போட்ட பிறகு வழங்கப்படும் சர்வதேச தடுப்பூசி சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாகும். இந்த சான்றிதழ் பாஸ்போர்ட்டுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோய் பரவும் வாய்ப்புள்ள நாடுகள் அல்லது நோய் பரப்பும் கொசுக்கள் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ய இந்த சான்றிதழ் கட்டாயமாகும்.