பொது மருத்துவம்

Health| தனியாக இருக்கும்போதோ, திடீரெனவோ மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ரத்த ஓட்டம் தடைபட்டுவிட்டால் 20 முதல் 40 நிமிடங்களுக்குள் இதய தசை கடும் பாதிப்படைய தொடங்கி விடும்.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்திலோ, குடும்பத்தினருடன் இருக்கும்போதோ திடீரென மாரடைப்பு வந்தால் உடலில் வியர்வை அதிகமாக வழியும். மூச்சுத்திணறல் ஏற்படும். பதற்றமும், பயமும் அதிகரிக்கும். குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துவிடுவார்கள்.

அந்த சமயத்தில் துரிதமாக செயல்படுவது உயிர் காக்க உதவிடும். சரியான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டால் அபாய கட்டத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்...

மூச்சை ஆழமாக உள் இழுத்தல்

மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் சுவாசிப்பதற்கு சிரமம் உண்டாகும். மூச்சுத்திணறலால் அவதிப்பட நேரிடும். அந்த சமயத்தில் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து ஆழமாக மூச்சை உள்ளிழுப்பது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்ல உதவும். ஆம்புலன்ஸ் வரும் வரை ஆழ்மூச்சு எடுப்பது அமைதியாக இருக்கவும். உடலுக்கு ஆக்சிஜன் வழங்கவும் உதவும். ஆனால் இது சிகிச்சை முறை அல்ல. தற்காலிக பதற்றத்தை தடுக்கும் நடவடிக்கை மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேணடும்.

அமைதி காத்தல்

ஆழமாக மூச்சை உள் இழுப்பது போலவே அமைதியாக இருக்க வேண்டும். அப்படி பதற்றமடையாமல் அமைதி காப்பது நுரையீரலின் செயல்பாடு தடைபடாமல் இருக்க உதவிடும். நுரையீரலை சூழ்ந்திருக்கும் அழுத்தத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதயம், நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியை மூளையுடன் இணைக்கும் 'வேகஸ்’ நரம்பு அமைப்பிலும் அதிர்வுகளை உண்டாக்கும்.

அவசர சிகிச்சைக்கு அழைத்தல்

இதய நோயாளிகள் அவசர சேவை எண்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். தாங்களே வாகனம் ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. வீட்டில் தனிமையில் இருக்கும்பட்சத்தில் அவசர சிகிச்சைக்கு அழைத்ததும் செல்போனை 'ஸ்பீக்கர்' முறையில் வைத்து, ஆம்புலன்ஸ் வரும் வரை மருத்துவ உதவியாளர்கள் கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

ஆஸ்பிரின் மாத்திரை மென்று விழுங்குதல்

ஒவ்வாமை இல்லாதவர்களும், இதுவரை ஏதேனும் நீண்ட கால இணை நோய்களுக்கு மருந்து, மாத்திரை உட்கொள்ளாதவர்களும் ஆஸ்பிரின் மாத்திரையை நன்கு மென்று விழுங்கலாம். இது ரத்தம் உறைவதை தடுக்க உதவும் என்பதால் இதய பாதிப்பை குறைக்க வழிவகை செய்யும். மாத்திரையை நன்றாக மென்று சாப்பிடும் போது ரத்தத்தில் வேகமாக கலக்கும். உடனடியாக செயல்படும். அதேவேளையில் அல்சர், வயிற்றுப்புண், குடலில் ரத்தப்போக்கு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிடக்கூடாது என்று டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டவர்கள் எக்காரணத்தை கொண்டும் ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்ளக்கூடாது. ஏற்கனவே இதயநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்பு கொண்டவர்களும் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றே ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

உடனடி சிகிச்சை ஏன் முக்கியம்?

ரத்த ஓட்டம் தடைபட்டுவிட்டால் 20 முதல் 40 நிமிடங்களுக்குள் இதய தசை கடும் பாதிப்படைய தொடங்கி விடும். விரைவான சிகிச்சை அளிப்பதன் மூலம் ரத்த உறைவு, ரத்தக்கட்டிகள் உண்டாவது தடுக்கப்படும். இதய நோய் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும்.

யாருக்கு மாரடைப்பு அதிகம் வரக்கூடும்?

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள்

நீரிழிவு நோயாளிகள்

உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தவர்கள்

புகைப்பிடிப்பவர்கள்

உடல் பருமன் கொண்டவர்கள்

குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் இருப்பவர்கள்

நீண்டகால மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள்

மாரடைப்பை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டியவை

இதயத்திற்கு உகந்த உணவு பழக்கம்

ஒழுங்கான உடற்பயிற்சி

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்

புகைப்பிடிப்பதை நிறுத்துதல்

அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்தல்.