எல்லோரும் வாழ்வில் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், மகிழ்ச்சிக்குமான மந்திரங்கள் ரகசியமானவை அல்ல, எளிமையானவை.
அவற்றில் சில இதோ...
* எப்போதும் முதலில், உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம்.
* உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசை கட்டுப்படுத்தப் பழகுங்கள்.
* உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, தொழில் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.
* உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.
* பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.
* அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்வேன் என்று உங்களுக்கு நீங்களே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
* உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.
* யாரையும் வருத்தப்பட வைக்காதீர்கள், வார்த்தைகளால் கூட.
* சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!
* பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.
* ஒருவர் நல்லது செய்யும்போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்து விடாதீர்கள்.
* உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு என்று உணர்ந்து நடங்கள்.
* தவறான வழியில் செல்லாதீர்கள்.
* எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.
* சொன்ன வாக்கை மீறாதீர்கள். நிறைவேற்றுவது கடினம் என்று தோன்றினால், வாக்குக் கொடுக்காதீர்கள்.
* 'சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வெட்டியாய் பொழுதைக் கழிப்பதைத் தவிருங்கள்.
* வருடத்துக்கு ஒரு புதிய மென்திறனாவது கற்றுக் கொள்ளுங்கள். நம்மை விடச் சிறியவரிடமும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை.
* கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவர் போல் வாழ வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் பாடம்தான். சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்தான்.
* அடுத்தவர்களுடைய மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.
* மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.
* மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.
* பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்கள் நலத்தையும், உங்கள் வசதியையும் மட்டுமே முன்னிறுத்தாதீர்கள்.
* இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளிக் கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும் போது சிறிதும் கிள்ளிச் செல்ல முடியாது.
* நம்பிக்கைதான் வாழ்க்கை. எப்போதும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நாளையே எல்லாம் மாறும்.