பொது மருத்துவம்

படை நோய்: காரணங்களும்.. தடுக்கும் வழிமுறைகளும்..!

ஜீன்ஸ், சிந்தெடிக் மற்றும் லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.

யூர்டிகேரியா என்று அழைக்கப்படும் படை நோய், தோலில் தோன்றும் சிவப்பு நிறத்தடிப்புகளையும், அரிப்பையும் குறிக்கும் பொதுவான பாதிப்பாகும். சிலருக்கு படை நோய் சில நாட்கள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மாதக்கணக்கிலோ அல்லது ஆண்டுக்கணக்கிலோ கூட நீடிக்கலாம். இதற்கு தற்காலிக நிவாரணம் பெறவும், நிரந்தரமாக குணப்படுத்தவும் பல சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த படை நோயை தடுக்கும் வழி முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை பற்றி பார்ப்போம்.

ஏன் ஏற்படுகிறது?

கத்தரிக்காய், கருவாடு, முட்டை மற்றும் சில வகை கடல் உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில நோய்களுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் உண்டாகலாம். அதிக வெயில், கடும் குளிர் அல்லது தூசு போன்றவற்றால் வரலாம். எறும்பு அல்லது வண்டு கடித்தால் அந்த இடத்தில் தடிப்புகள் வீக்கம் தோன்றி படை நோயாக மாறலாம்.

படை நோயை தடுக்கும் வழிமுறைகள்...

இது வெப்பமான காலம் என்பதால் தினசரி குறைந்த பட்சம் இரண்டு முறை குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். சருமத்தில் ஈரப்பதம் இன்றி முழுமையாக துடைக்க வேண்டும்.

ஈரமாக மற்றும் வியர்வையோடு ஆடைகளை ஒருபோதும் அணியக்கூடாது.

மற்றவர்கள் உபயோகப்படுத்தும் சோப்பு, துண்டு மற்றும் ஆடைகளை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

எப்போதுமே பருத்தி ஆடை மற்றும் தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

ஜீன்ஸ், சிந்தெடிக் மற்றும் லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.

தொடை இடுக்கு மற்றும் இடுப்பு பகுதிகளில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் பருத்தியாலான பாக்சர் வகை உள்ளாடைகளை அணிய வேண்டும்.

ஆடைகளை எப்போதுமே வெந்நீரில் சலவை செய்து அதன் உள்பக்கம் வெயில் படும்படி உலர்த்துங்கள்.

தொற்று பாதிப்பு ஆடைகளை தனியாக வைத்து சலவை செய்ய வேண்டும்.

மணிக்கட்டு மற்றும் இடுப்பை சுற்றி அரைஞாண் கயிறுகளை இறுக்கமாக கட்டக் கூடாது.

தண்ணீரில் வேலை செய்பவர்கள் வேலை முடிந்ததும் கை, கால் விரல்களின் மற்றும் நகங்களின் இடையில் டவல் வைத்து ஈரப்பதத்தை தவறாமல் துடைக்க வேண்டும்.

வீட்டு தரைகளை மட்டுமின்றி சோபா கவர்கள் மற்றும் போர்வைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

மருத்துவ ஆலோசனை...

படைநோய்க்கு ஸ்டீராய்டுகள் அடங்கிய ஆயிண்ட்மெண்டுகள், கிரீம்களை பயன்படுத்தாதீர்கள். தினசரி 2 முறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2 செ.மீ.க்கு அப்பால் வரை மற்றும் அதை சுற்றிலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கிரீம்களை தடவுங்கள். நீங்களே மருந்து கடைகளில் வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.