நவீன கால கட்டத்தில் வேலை பளு, அலுவலகப் பணிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இரவு உணவை மிகவும் தாமதமாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தத் தாமதமான உணவுப் பழக்கம் நமது உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்தை முற்றிலுமாக சிதைத்து, பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மனித உடலின் செரிமான மண்டலம் இரவு நேரங்களில் ஓய்வெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே படுக்கும்போது, செரிமான உறுப்புகள் கூடுதல் அழுத்தத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவு செரித்தலில் தாமதம் ஏற்பட்டு, வயிற்றிலுள்ள அமிலங்கள் மேல்நோக்கி (உணவுக்குழாயை நோக்கி) கசியும். இதனால் கடுமையான நெஞ்செரிச்சல், அஜீரணம், புளித்த ஏப்பம் மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது.
சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் இரவு நேர உணவுக்கும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கல்லீரலின் முக்கியப் பணியான ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்துக்களைக் கட்டுப்படுத்துவது உடலின் உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில்லை.
உடலின் இயல்பான ஓய்வு நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது, அது கல்லீரலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதற்கும், நாளடைவில் கல்லீரல் சுருக்கம் போன்ற ஆபத்தான நிலைகளுக்கும் வழிவகுப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இரவு நேரங்களில் சாப்பிடும் உணவுகள், குறிப்பாக அதிகப்படியான கார்போஹைட்ரேட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் ரத்த சர்க்கரை அளவை கடுமையாகப் பாதிக்கின்றன. தாமத நேரத்தில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பதில் சமநிலையின்மை ஏற்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கிறது. இது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.
இரவு வேளையில் உடல் இயற்கையாகவே ஆற்றலைச் சேமித்து ஓய்வு நிலைக்குத் தயாராகும். இந்த நேரத்தில் உட்கொள்ளும் அதிகப்படியான கலோரிகள் உடனடியாக எரிக்கப்படாமல் உடலில் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் ஏற்படும் பசி உணர்வு சில சமயங்களில் ஆரோக்கியமற்ற துரித உணவுகள் அல்லது அதிகக் கலோரி கொண்ட தின்பண்டங்களை நாடச் செய்து, உடல் பருமனைத் துரிதப்படுத்துகிறது.
செரிமானப் பணிகள் இரவும் தொடர்வதால் மூளைக்கும் உடலுக்கும் முழுமையான ஓய்வு கிடைப்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தின் போது சுரக்க வேண்டிய சீரான ஹார்மோன்கள் தடைபடுகின்றன. இது ஒட்டுமொத்த உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
* இரவு உணவை எப்போதுமே தூங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாக முடித்துக்கொள்வது மிகவும் நல்லது.
* இரவில் எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த எண்ணெய்ப் பயன்பாடுள்ள மற்றும் சத்தான இலகுவான உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
* படுக்கைக்குச் செல்லும் முன் அதிகக் காரமான, சர்க்கரை நிறைந்த மற்றும் துரித உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்.