ஆரோக்கியம்

கணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ

விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

மாலை மலர்

எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.

கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.