சினிமா

சிறு பட்ஜெட் படங்களை எடுத்தால் குழி தோண்டி புதைக்கிறார்கள்: விசிறி இயக்குனர் வேதனை

சிறு பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் குழி தோண்டி புதைத்துவிடுவார்கள் என்று 'விசிறி' பட இயக்குனர் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

கடந்த வெள்ளியன்று விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', விஜய் யேசுதாஸின் 'படை வீரன்', சண்முகப் பாண்டியனின் 'மதுர வீரன்', சமுத்திரகனியின் 'ஏமாலி' ஆகிய படங்களோடு புதுமுக நடிகர்கள் நடிப்பில் 'விசிறி' என்ற படம் வெளியானது. இப்படத்தை 'வெண்ணிலா வீடு' படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ளார்.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று இயக்குனர் வெற்றி மகாலிங்கம் கூறியிருக்கிறார்.

இது குறித்து வெற்றி மகாலிங்கம் கூறும்போது, ‘விசிறி படத்தை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடுகிறோம் என முன்பே திட்டமிட்டு, அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. சில படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் குறைவு என்றாலும், எங்களுடைய படத்திற்கு திரையரங்குகள் தர மறுக்கிறார்கள்.

சின்ன படத்துக்கு ஆதரவு அளிப்போம் என பல சங்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். ஆனால், யாருமே உதவவில்லை. சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள். உங்களை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள். விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல், அதற்கு நல்ல தீர்வு என வித்தியாச முயற்சியில் 'விசிறி' படத்தை எடுத்தேன். ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை’ என்றார்.

SCROLL FOR NEXT