ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பல்வேறு புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டது இல்லை. இதனால் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து பல விவாதங்களும் எழுந்துள்ளன.
ஆர்.கே.நகரில் கடைசி நாளன்று விஷால் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும். அதன்படி அந்த பகுதியை சேர்ந்த 10 பேர் விஷாலை முன்மொழிந்தனர்.
இதில் விஷாலின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்துள்ள 10 பேரில் சுமதி, தீபன் என்ற 2 பேர் போலியாக சேர்க்கப்பட்டு இருப்பதாக சில வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் சுமதி, தீபன் இருவரையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் விஷாலின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஷால் முறையிட்டதால் அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, விஷால் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடிதம் ஒன்றை வழங்கினார். விஷால் வேட்புமனு விவகாரம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இதுகுறித்து தேர்தல் கமிஷன் மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்து பின்னர் மறுத்த சுமதி, தீபன் ஆகிய இருவரும் மீண்டும் இன்று மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால் விஷாலின் வேட்புமனு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.