விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் `சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தில் இருந்து திரிஷா விலகியதால் அவருக்கு பதிலாக சதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இந்த படத்தை வருகிற ஜுன் மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு இன்னும் முடியாததாலும், தமிழ் புத்தாண்டுக்கு ரஜினிகாந்தின் `2.0' ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டதாலும் படத்தின் ரிலீசை ஜுன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் - த்ரிஷா நடிப்பில் உருவான `சாமி' படம் 2003-ஆம் ஆண்டு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.