சினிமா

சிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு

நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனாக அவரது பேரன் விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NadigaiyarThilagam #Mahanati

மாலை மலர்

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். 

சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். மேலும் மற்றுமொரு கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவும் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். 

இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாத இறுதியுடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati #Samantha