சினிமா

டி.வி.நடிகர் பிரதீப் சாவில் மர்மம் இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

டி.வி. நடிகர் பிரதீப் சாவில் மர்மம் இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

மாலை மலர்

சுமங்கலி தமிழ் டி.வி. தொடரில் நடித்து வந்தவர் பிரதீப். ஐதராபாத்தை சேர்ந்த இவர் தெலுங்கு டி.வி. தொடரிலும் நடித்து வந்தார். இவரது மனைவி பாவனி ரெட்டி. இவரும் டி.வி. நடிகை ஆவார். சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதீப் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தலை, உடம்பில் காயங்கள் இருந்தன. போலீசார் இவரது சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பாவனியிடமும், வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர் ஷிராவன் என்பவரிடம் விசாரித்து வந்தனர். பிரதீப் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் பிரதீப் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. மேலும் தலை, உடம்பில் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. எனவே பிரதீப் தற்கொலை செய்து இருக்கவே வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.வீட்டில் தங்கியிருந்த ஷிராவன் தொடர்பாக பிரதீப்-பாவனி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரிக்கிறார்கள்.