வசந்தபாலன் 
சினிமா

‘அங்காடித் தெரு’ படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது - வசந்தபாலன் நெகிழ்ச்சி

தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்து இயக்குனர் வசந்தபாலன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற சட்டப்பேரவையில் நேற்று சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்ட திருத்தத்தைத் தாக்கல் செய்திருப்பதற்கு சமூக வலைதளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். 

தற்போது இந்தச் சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்து இயக்குனர் வசந்தபாலன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசுக்கு நன்றி. என் ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்”. இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.