சினிமா

பிரபுதேவா, நயன்தாராவை தொடர்ந்து சிபிராஜுக்கு கைகொடுத்த பிரபல தொலைக்காட்சி

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் - ரம்யா நம்பீசன் - வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் `சத்யா' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரைம் த்ரில்லராக உருவாகி வரும் ‘சத்யா’ தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக்தான். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  இதில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் `சத்யா' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரபுதேவா நடித்து வரும் ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடித்து வரும் ‘அறம்’, சந்தானத்தின் மன்னவன் வந்தானடி, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடித்து வரும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட பல படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.