சினிமா

தமிழ் ராக்கர்ஸால் `மெர்சல்' படக்குழுவுக்கு வந்த சோதனை

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகி சக்கை போடுபோட்டு வரும் நிலையில், தமிழ் ராக்கர்ஸால் `மெர்சல்' படக்குழுவுக்கு சோதனை ஒன்று கிளம்பியிருக்கிறது.

மாலை மலர்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், மெர்சல் படக்குழுவுக்கு அதிர்ச்சயளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், `மெர்சல்' படம் வெளியான முதல் நாளே அதன் தெளிவான வீடியோ இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் சார்பில் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் படங்கள் திரைக்கு வரும் அதேநாளே இணையதளத்திலும் வெளியாகி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறி வருகிறார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான `துப்பறிவாளன்' படமும் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.