சர்ச்சைக்குரிய ‘பத்மாவத்’ திரைப்படம் கடும் எதிர்ப்பை மீறி, கடந்த மாதம் 25-ந் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்தது. நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங்குக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்தியில், நடிகர் ஷாகித் கபூரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, அவர் கூறியதாவது:-
‘பத்மாவத்’ படம் நீண்ட நாட்களாக சர்ச்சையில் சிக்கியதால், படக்குழுவினர் அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைய விஷயங்களை சகித்து கொள்ள நேர்ந்தது. நிறைய விஷயங்களை இழக்க நேர்ந்தது. நிறைய தியாகங்கள் செய்ய நேர்ந்தது. மேலும், உணர்வுகளை மனதில் அடக்கி வைத்து கொள்ள பழகி கொண்டோம்.
குறிப்பாக அரசியல் ரீதியாக நாங்கள் சரியாக இருக்க நேர்ந்தது. இந்த படம் ஏராளமான தடைகளை கடந்து வெளியானது. இன்றைக்கு நாங்கள் சரியானவர்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக உணர்கிறோம். படம் வெளியான இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல படங்களுக்கு நாடு எப்போதும் ஆதரவு அளிக்கும். இது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. இந்த அன்பும், ஆதரவும் நான் எதிர்பார்த்ததை விட அதிகம்.
இவ்வாறு ஷாகித் கபூர் தெரிவித்தார்.