சினிமா

த்ரில்லர் கதையில் இணைந்த சந்தோஷ் பிரதாப் - அதுல்யா

‘6 அத்தியாயம்’ படத்தில் ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் கதையில் சந்தோஷ் பிரதாப் - அதுல்யா இணைந்து நடிக்கின்றனர்.

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும், த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.  

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகும் இந்த படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார்.  

த்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல், சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. வழக்கமான பாடல் (காதல் பாடல்) போல் இல்லாமல் உணர்வுபூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர்நாடியாக இருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தும். 

சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 

இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன்  என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், விரைவில் ரிலீஸாக இருக்கிறது.