திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தம்பானூர் நிஷாகந்தி அரங்கில் கேரள சினிமா ஆண்டு விழா நடந்தது. இதில் மலையாள திரையுலக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள் பங்கேற்றனர்.
கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் விழாவை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அவர் தனது திரையுலக ஆரம்பகால பாடல்களை மேடையில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
விழாவில் ஜேசுதாஸ் பேசும் போது கூறியதாவது:-
என்னை பாடகராக மாற்றியது எனது தந்தை அகஸ்டின் ஜோசப்தான். எனது தாய் எனது மனதில் தெய்வீக சிந்தனையை ஏற்படுத்தினார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாய், தந்தை வழிகாட்டுதல் மிக முக்கியமானதாகும். கடவுள் புண்ணியத்தில் எனக்கு அது ஏராளமாக கிடைத்தது.
தாய், தந்தையை மதித்து நடந்தால் வாழ்க்கையில் உயர முடியும். அதுதான் நமது கலாச்சாரமும் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.