சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சித்தூர் ராணி பத்மினியின் கதை 'பத்மாவதி' என்ற பெயரில் தீபிகா படுகோனே - ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.
இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. சென்சார் போர்டும் அனுமதி மறுத்தது. இதனால் படத்தின் பெயர் 'பத்மாவத்' என்றும் காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.
இந்த படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் இந்தப் படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டன.
இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய தணிக்கை குழுவினர் அனுமதி அளித்த பிறகும் பத்மாவத் படத்துக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது சட்டவிரோதம். எனவே தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த ஜனவரி 25-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பத்மாவத் படத்தை திரையிட அனுமதியளித்து உத்தரவிட்டது.
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியான பத்மாவத் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், வசூலிலும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் குவித்து சாதனை படைத்தது.
குறிப்பாக, இந்த படத்தில் பத்மாவதியை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியுடன் சித்தூரின்மீது படை எடுத்த மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரன்வீர் கபூர் தனது கலக்கலான நடிப்பாற்றலாலும், வில்லத்தனத்தாலும் ரசிகர்களை மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இதுதொடர்பாக, தாதா சாகேப் பால்கே விருது கமிட்டி அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பத்மாவத் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நீங்கள் 2018-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.