கோர்ட்டு உத்தரவுப்படி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி இருக்கிறார்கள். அதை அடையாறு சிவாஜி மணிமண்டபத்தில் அமைக்க இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம்.
மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பா ளர் சிலை உள்ளன. எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே கடற்கரையில் உள்ள தேசத்தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே, சிவாஜிக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர்மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடிகர் திலகத்தின் சிலையை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையே மாற்றி அமைக்க வேண்டும் என்று, கடந்த ஜூலை 17-ம் நாள் சென்னை, உயர்நீதிமன்றத்தில் சிவாஜி சமூகநலப்பேரவை தொடர்ந்த வழக்கில், எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க நான்கு வார காலம் அவ காசம் கேட்ட தமிழக அரசு, தற்போது, அதுபற்றி எந்த உத்தரவாதமும் அளிக்காமல், நடிகர் திலகம் சிலையை சென்னை கடற்கரை காமராஜர் சாலை யிலிருந்து நள்ளிரவில் அகற்றியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நாங்கள் விடுக்கும் கேள்விகள் இதுதான்:
1. தமிழகமெங்கும் சாலையின் நடுவே 13 ஆயிரம் சிலைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் அகற்ற இந்த அரசு முன்வருமா?
2. சாலைகளில் இருக்கும் சிலைகள் எல்லாம் அகற்றப்பட்டு, அவரவர்கள் மணி மண்டபம் அல்லது நினைவிடங்களில் தான் அமைக்க வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு மேற்கொள்ளுமா?
3. நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் சிலையை அகற்றுகிறோம் என்று தமிழக அரசு கூறினால், நீதிமன்ற உத்தரவுகளையெல்லாம் அப்படியே தமிழக அரசு பின்பற்றுகிறதா? அப்படியானால், நீதிமன்ற உத்தரவுப்படி உடனே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி அளிக்கப்படுமா? தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூடப்படுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
ஆனாலும், நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்பதில், சிவாஜி ரசிகர்களாகிய எங்களுக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை. அதே நேரத்தில், சென்னையில் அமைந்திருக்கும் ஒரே சிலையை மக்கள் பார்வையில் படும்படியான பொது இடத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளி, நள்ளிரவில் சிலையை அகற்றியது ஏன்?
நடிகர் திலகம் சிவாஜி உயிரோடு இருந்த காலத்தில் அவருக்கு அரசாங்கங்கள் உரிய மரியாதையை அளிக்கவில்லை. அவர் மறைந்தபின்னும் அவருக் கான மரியாதையை அளிக்காததோடு மட்டுமல்ல, அவருடைய சிலை அகற்றல் என்பது, தமிழ்க்கலைக்கு ஏற்பட்ட அவமரியாதை, தமிழினத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு என்றே கூறவேண்டும்.