சினிமா

ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் - ரசிகர்கள் முன்பு ரஜினி பேச்சு

சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ரசிகர்கள் முன்பு வீடியோ கான்பிரன்சிங் இன்று பேசிய போது, ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றார். #Rajinikanth

மாலை மலர்

ஆன்மீக பயணமாக இமயமலை சென்றிருந்த ரஜினி நேற்று சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை மன்ற நிர்வாகிகளான ராஜீ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தேர்வும் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ரஜினி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். தமிழக அரசியலில் நாம் மாற்றத்தை உருவாக்க வேண்டும். முழுவதையும் நாம் மாற்றவேண்டும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் பொறாமையோடு செயல்படக்கூடாது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் கடைபிடித்தால் எதையும் சாதிக்க முடியும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

இதற்கிடையே ரஜினி புதுக்கட்சி வி‌ஷயத்தில் பொறுமையாகவே உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட ரஜினி தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்ப்புத்தாண்டில் (ஏப்ரல் 14-ந்தேதி) ரஜினி புதிய கட்சியை தொடங்கப்போகிறார். அன்றைய தினமே கட்சி கொடியையும், கொள்கைகளையும் அறிவிக்கப்போகிறார் என்பது பற்றிய தகவல்கள் வரிசையாக அணிவகுத்தன. இதனால் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ரஜினி சரவெடியாய் வெடித்தார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே நான் வந்துள்ளேன். எம்.ஜி.ஆர். ஆட்சியை நிச்சயமாக தர முடியும். எனது அரசியல் பயணத்தை வரவேற்காதவர்கள் அதனை ஏளனம் செய்வது ஏன்? என்றும் பொங்கினார்.

எப்போதுமே பொது மேடைகளில் அதிகம் தலைகாட்டாத ரஜினியின் அந்த மேடைப்பேச்சில் அனல் தெறித்தது. அந்த சூட்டோடு அரசியல் களத்தில் அனலை பறக்க விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ரஜினி அரசியல் இல்லாத ஆன்மீக பயணத்தை தொடங்கினார். கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு ஆன்மீக பயணமாக புறப்பட்டு சென்ற அவரிடம் வழக்கம் போல பத்திரிகையாளர்கள் கேள்வி கணைகளை தொடுத்தனர். காவிரி பிரச்சினை, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றிய கேள்விகள் அதில் பிரதானமாக இருந்தன. ஆனால் ரஜினியோ எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. நான் இப்போது ஆன்மீக பயணம் செல்கிறேன். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. ‘‘இப்போதைக்கு அது வேண்டாம் கண்ணா’’ என்று தனது பாணியிலேயே பதில் அளித்தார்.

ஆன்மீக சுற்றுப்பயணத்தின் போதும் வடமாநில ஊடகங்கள் ரஜினி பின் தொடர்ந்து விடாமல் விரட்டிச் சென்றன.

அப்போதும் அரசியல் பற்றிய கேள்விகளை தவிர்த்த ரஜினியிடம் தமிழக பிரச்சினைகளில் தொடர்ந்து நீங்கள் மவுனமாக இருப்பதாகவே கமல் கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி ‘‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’’ என்று புதிய குண்டை தூக்கி போட்டார்.

இப்படி ஆன்மீக பயணத்தின் போது அவரது செயல்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் விமர்சன தீயை கொளுத்தி போட்டன.

இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தவிர்த்தார். ஆனால் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் எப்போதும் இல்லாத வகையில் (காரில் இருந்தபடியே பேட்டி அளிப்பதே ரஜினியின் வழக்கம்) பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஏப்ரல் 14-ந்தேதி புதிய கட்சியை நீங்கள் தொடங்கப்போவதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ரஜினி, அது தவறான தகவல் என்று கூறியதுடன் அத்தோடு பதிலை நிறுத்திக் கொண்டார். இதன் மூலம் புதுக்கட்சி இப்போதைக்கு (அடுத்த மாதம்) இல்லை என்பதை உறுதிபடுத்திய ரஜினி புதுக்கட்சியை தொடங்குவது எப்போது என்பதை தெளிவுபடுத்த வில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினி வெளியிட்ட உடனேயே தமிழ்ப் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்கப்போகிறார் என்கிற தகவல்கள் உலாவர தொடங்கி விட்டன. இதனை ரஜினியோ, ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகளோ மறுக்கவில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் புத்தாண்டில் தலைவர் புதிய அவதாரம் எடுப்பார் என்றே எதிர்பார்த்திருந்தனர். இதுபோன்ற ஒரு சூழலில் ரஜினியோ தமிழ்ப்புத்தாண்டில் புதுக்கட்சி இல்லை என்று தடாலடியாக அறிவித்திருப்பது ரசிகர்களை தடுமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்? என்று காத்திருந்த அவரது ரசிகர்கள், தங்களது தலைவர் முழுநேர அரசியல்வாதி ஆவது எப்போது? புதிய கட்சியை தொடங்குவது எப்போது? அரசியல் களத்தில் வேகத்தோடு செயல்படப் போவது எப்போது? என்பது போன்ற கேள்விகளை தங்களுக்குள்ளே இப்போது கேட்டுக் கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்கான விடை ரஜினிக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.