விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
நான் சிறு வயதில் இருந்தே சினிமா பார்க்கும்போது அதில் எத்தனை சண்டை காட்சிகள் இடம் பெறும். படம் எவ்வளவு நீளம் என்பதை கவனமாக பார்ப்பேன். இன்றுவரை எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. தற்போது எனக்கு 67 வயது ஆகிறது. இப்போதும் எனது படங்களில் சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன.
உலகம் முழுவதும் ‘ஆக்ஷன்’ படங்களுக்குத்தான் மரியாதை அதிகம். திரையில் இதை கொண்டு வருவதற்காக ஸ்டண்ட் இயக்குனர்கள், கலைஞர்கள் வியர்வையை மட்டுமல்ல, ரத்தம் சிந்தி உழைக்கிறார்கள். உடல் உழைப்புதான் இவர்களது மூலதனம்.
இவர்களுக்கும் குடும்பங்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள். கடுமையாக உழைத்துதான் அவர்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. இவர்களது உழைப்பால்தான் நடிகர்களுக்கு பெயர் கிடைக்கிறது.
நல்ல ஆக்ஷன் படங்களை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். அதன் மூலம் படங்கள் வெற்றி பெறுகின்றன. என் படங்கள் வெற்றி பெறவும் இவர்களுடைய கடுமையான உழைப்பும் காரணம்.
இந்த ‘ஸ்டண்ட்’ கலைஞர்கள் சங்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். அவருடைய நூற்றாண்டு விழாவின்போது இந்த சங்கத்தின் பொன்விழாவும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எம்.ஜி.ஆர். நடிப்பை விட்ட பிறகு ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பல்வேறு விதங்களில் உதவி செய்தார்.. நானும் அவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னிடம் கேட்டால் எந்த உதவியும் நான் நிச்சயம் செய்வேன். என் வீட்டு கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும். இச்சங்கம் மேலும் வளர, அதில் உழைப்பவர்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் மற்றும் நடிகைகள் பங்கேற்ற நடனங்கள் இடம் பெற்றன. இதை நடன இயக்குனர் கலா ஒருங்கிணைத்தார். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இடம் பெற்ற ஸ்டண்ட் காட்சி இடம் பெற்றது. நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்ற நகைச்சுவை காட்சி இடம் பெற்றது.
நடிகர்கள் மோகன்லால், சிவக்குமார், பாலகிருஷ்ணா, சூர்யா, விஷால், கார்த்தி, பாக்யராஜ், விவேக், ஜெயம்ரவி, சிவகார்த்தி கேயன், ஜீவா, விஜயசேதுபதி, ஆர்யா, பிரசாந்த், தியாகராஜன், சிபிராஜ், விக்ரம் பிரபு, தனுஷ், சூரி, மயில்சாமி, மற்றும் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா, நடிகைகள் சுகாசினி, டாப்சி, ரம்யா நம்பீசன், விஷ்ணுமஞ்சு, ஸ்ரேயா, நிக்கி கல்ராணி, மாலாஸ்ரீ, கேத்தரின் தெரசா, இனியா, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ்,
டைரக்டர்கள் கஜேந்திரன், தரணி, பிரவீண்காந்த், எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், தேனப்பன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, ராஜேஷ், எஸ்.ஏ.ராஜ்குமார், ஸ்டண்ட் கலைஞர்கள் சங்க தலைவர் அனல் அரசு, செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.