சினிமா

அடுத்ததாக பொங்கல் தினத்தை குறிவைத்த ரஜினிகாந்த் - அண்ணன் சத்திய நாராயணராவ் தகவல்

புத்தாண்டை ஒட்டி ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவித்திருக்கும் நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் பொங்கல் தினத்தை குறிவைத்திருப்பதாக ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் தகவல் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry

மாலை மலர்

ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் பெங்களூரில் வசித்து வருகிறார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதாக நேற்று அறிவித்தது பற்றி அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது சத்திய நாராயணராவ் கூறியதாவது:-

எனது சகோதரர் ரஜினி எப்போதும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதில் விருப்பம் உள்ளவர். சினிமாவில் நுழைவதற்கு முன்பு அவர் பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தார்.

அவர் தனது வேர்களை மறக்கவில்லை. தான் பிறந்த கர்நாடகா மாநில மக்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவரது கனவாகும். நிச்சயம் அது நிறைவேறும்.

தற்போது அவர் தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு - கர்நாடக இரு மாநில மக்களுக்கும் அவர் சேவை புரிவார்.

கர்நாடகா - தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை எல்லாம் அவரால் நிச்சயமாக, மிக எளிதாக தீர்த்து வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ரஜினியின் புதிய கட்சி பெயரை எல்லோரும் ஆவலோடு கேட்கிறார்கள். பொங்கல் சமயத்தில் அவர் தனது கட்சி பெயரை வெளியிட வாய்ப்பு உள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ரஜினியின் பங்களிப்பு இருக்குமா என்று என்னால் இப்போதே சொல்ல முடியாது.

ரஜினிக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. கிராமங்கள் முதல் நகரம் வரை அவற்றை வலுப்படுத்த வேண்டி உள்ளது. தற்போது அதற்குதான் அவர் முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு சத்திய நாராயணராவ் கூறினார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry