நடிகர் ரஜினி காந்தின் 68-வது பிறந்தநாளை யொட்டி, அவரை காண்பதற்காக ரசிகர்கள் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு திரண்டுவந்தனர்.
ரசிகர்கள் ரஜினியை பார்க்க முடியவில்லை. அவர் கேளம்பாக்கத்தில் ஓய்வு எடுக்கிறார் என்று கூறப்பட்டது. அரசியல் முடிவுபற்றி ரஜினி அறிவிப்பார் என்று நம்பிய ரசிகர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குவிந்தனர். அங்கும் அவர் செல்லவில்லை.
என்றாலும், ரசிகர்கள் கேக்வெட்டியும், பட்டாசு வெடித்தும் ரஜினி பிறந்த நாளை கொண்டாடினார்கள். விதவிதமான போஸ்டர்கள் ஒட்டி மகிழ்ந்தனர். நலத்திட்ட உதவிகள் ரத்ததானம் செய்தார்கள். கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்தனர். வருங்கால முதல்வர் வாழ்க, தமிழ் நாட்டின் நாளைய நம்பிக்கை என்று முழக்கமிட்டனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் போனிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
திரைப்பட துறையை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்திபட உலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எனது நெருங்கிய நண்பர், என் இதயத்துக்கு நெருக்கமானவர், மிகச்சிறந்த மனிதர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘நான் எப்போதும் உங்கள் ரசிகன். உங்களுடன் பணிபுரிந்திருப்பது பெருமை. சூப்பர் ஸ்டார் ரஜினிசாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மாதவன், தமன்னா உள்பட பல நடிகர், நடிகைகள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போது சிலமணி நேரத்துக்கு முன்தான் பிறந்தது 12-ந்தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கு ரஜினிகாந்த் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
செய்தியாளர்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.