ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார். இதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருதய ஆபரேஷன் செய்யவும் உதவி செய்து வருகிறார்.
சமீபத்தில் பிரதீப் என்ற 6 வயது சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். இது வெற்றிகரமாக நடந்து, அந்த சிறுவன் உயிர் பிழைத்திருக்கிறான்.
இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள ராகவா லாரன்ஸ், ‘இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இதய கோளாறு இருக்கும், வசதி இல்லாத குழந்தைகளுக்கு உதவ தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். தன்னை தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 142 குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை பெற்று குணம் அடைந்திருக்கிறார்கள். இப்போது நலம் பெற்று இருக்கும் சிறுவன் பிரதீப்-க்கு நடந்து இருப்பது 143-வது இதய அறுவை சிகிச்சையாகும். #RaghavaLawrence