சினிமா

புதுசா நான் பொறந்தேன்

நாயகன் பியோன் ஜெமினியும், நாயகி கல்யாணி நாயர் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள 'புதுசா நான் பொறந்தேன்' படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...

கொடைக்கானலில் நாயகன் பியோன் ஜெமினியும், நாயகி கல்யாணி நாயரும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகியை பின்தொடர்வதே வேலை. அவளோ இவனை கண்டுகொள்வதே கிடையாது. நாயகன் அவளை பார்ப்பதற்காகவே அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று அவளது அப்பாவிடம் பேச்சு கொடுத்து வருகிறான்.

இதற்கிடையே அதேஊரில் வீடு புகுந்து கொலை செய்து கொள்ளையடிக்கும் கராத்தே ராஜாவை போலீஸ் அதிகாரியான கலாபவன் மணி பிடித்து சிறையில் அடைக்கிறார். ஒருநாள் சிறையிலிருந்து கராத்தே ராஜா தப்பிக்கிறார். இதை அறிந்ததும் அந்த ஊரே பயந்து நடுங்குகிறது. அவரைப் பிடிக்க போலீஸ் வலைவீசி தேடுகிறது.

இந்நிலையில், கல்யாணியை வீட்டில் விட்டு அவரது அப்பா வெளியூர் செல்ல நேரிடுகிறது. அப்போது, அவளுக்கு துணையாக நாயகன் பியோன் ஜெமினியை தனது வீட்டில் வந்து தங்குமாறு சொல்லிவிட்டு செல்கிறார்.

பியோன் ஜெமினிக்கு நாயகி பூ, பொட்டு எதுவும் வைக்காமல் ஆடம்பரம் இல்லாமல் இருப்பது ஏதோ உறுத்தலாக இருக்கிறது. வீட்டில் அவள் தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவள் குடிக்கும் குளிர்பானத்தில் மயக்க மாத்திரையை போட்டு அவளை மயக்கமடைய வைக்கிறான். மயக்கத்திலேயே அவளுக்கு பட்டுப்புடவை உடுத்தி, பொட்டு, பூ வைத்து அழகு பார்க்க நினைக்கிறார். படுக்கையில் அவளை கிடத்திவிட்டு, பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்கிறான்.

திரும்பி வந்து பார்க்கையில், அந்த வீடு முழுவதும் அலங்கோலமாக கிடக்கிறது. படுக்கையில் கிடந்த நாயகியும் அலங்கோலமாக, அழுகை முகத்துடன் இருக்கிறாள். அவளது கட்டிலுக்கடியில் ஒரு ஆண் மயக்கமடைந்த நிலையில் கிடக்கிறான். அவன் யார்? அவனுக்கு என்ன நேர்ந்தது? அந்த வீட்டிற்குள் அவன் எதற்காக நுழைந்தான்? நாயகி எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்பதை சொல்வதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் பியோன் ஜெமினி கதாநாயகனுக்குண்டான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். நாயகி கல்யாணி நாயர் படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனே வலம் வந்திருக்கிறார். தோற்றத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இருப்பினும் ரொமான்ஸ் காட்சிகளிலெல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கலாபவன் மணி சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியின் அப்பாவாக நடித்திருப்பவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், படத்தின் பிற்பாதியில் இவரது கதாபாத்திரத்தின் தன்மை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

வித்தியாசமான ஒரு திரில்லர் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மஜித் அபு. ஆனால், அப்பா-மகளுக்கிடையே உள்ள உறவை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் திரில்லராக எடுக்கப்பட்ட காட்சிகள் திரில்லிங்கை கொடுக்கவில்லை.

கணேஷ் ராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஷக்கிர் ஜான் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.

மொத்தத்தில் ‘புதுசா நான் பொறந்தேன்’ புதுமையில் தெளிவு இல்லை.