சினிமா

கலவரம் - தீவைப்பு எதிரொலி: 4 மாநிலங்களில் ‘பத்மாவத்’ வெளியாகவில்லை

கலவரம் - தீவைப்பு எதிரொலியால் 4 மாநிலங்களில் ‘பத்மாவத்’ படம் வெளியாகவில்லை. குஜராத், ராஜஸ்தானில் இன்று சில ஊர்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. #Padmaavat #Padmavat #DeepikaPadukone

மாலை மலர்

ராஜஸ்தானில் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு ‘‘பத்மாவத்’’ என்ற பெயரில் சினிமா படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இந்த படத்தில் ராணி பத்மினியாக நடிகை தீபிகா படுகோனே, அவரது கணவராக ஷாகித் கபூர் நடித்துள்ளனர். அவர்களுக்கு எதிரான அலாவுதீன் கில்ஜி என்ற முகலாய மன்னராக ரன்வீர்சிங் நடித்துள்ளார்.

அந்த படத்தில் சித்தூர் ராணி பத்மினிக்கும், முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே ஏற்படும் மோதல் பிரதானமாக காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு இடையேயான தொடர்பை தவறான முறையில் சித்தரித்து இருப்பதாக வட மாநிலங்களில் வாழும் ராஜபுத்திர இன மக்கள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராணி பத்மினியை தெய்வமாக கருதும் ராஜபுத்திர இனத்தவர்கள், ‘‘பத்மாவத்’’ படம் சர்ச்சையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக ராஜபுத்திர இனத்தவர்களின் கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அவர்கள் பத்மாவத் படத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தணிக்கை துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து பத்மாவத் படத்தில் உள்ள 27 காட்சிகளை நீக்கிவிட்டு அந்த படத்தை வெளியிடலாம் என்று தணிக்கைத் துறை அனுமதித்தது. இதை எதிர்த்து ராஜபுத்திரர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பத்மாவத் திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று குஜராத், ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் அறிவித்தன.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதை ஏற்கவில்லை. பத்மாவத் படத்துக்கு தடை இல்லை. அந்த படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் ராஜபுத்திரர்கள் எதிர்ப்பை மீறி பத்மாவத் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் காரணமாக வட மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக ராஜபுத்திர இனத்தை சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், அரியானா உள்பட சில மாநிலங்களில் அவர்கள் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஒரே நாளில் சுமார் 200 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ராஜஸ்தானில் பல ஊர்களில் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அரியானாவில் குர்கானில் அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ராஜபுத்திரர்கள் சாலை மறியல் செய்தனர். ஆக்ரா-மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையிலும் மறியல்கள் நடத்தப்பட்டன. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

இதையடுத்து வட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கர்னி சேனா அமைப்பினர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். என்றாலும் பத்மாவத் திரைப்படம் வெளியிட திட்டமிட்ட தியேட்டர்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்து கர்னி சேனா அமைப்பினர் பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

இந்த நிலையில் பத்மாவத் படம் திட்டமிட்டப்படி உலகம் முழுவதும் 25-ந்தேதி (இன்று) முதல் திரையிடப்படும் என்று அந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ள சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்தார். இதனால் ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டம் நேற்று மிகவும் தீவிரமானது.

இதைத் தொடர்ந்து தியேட்டர்களின் பாதுகாப்பு கருதி பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம் என்று இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 75 சதவீத மல்டி பிளக்ஸ் திரையரங்க வளாகங்கள், இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் பின் வாங்கியதால் பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படத்தை இன்று திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை. நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் தியேட்டர்களில் பத்மாவத் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படம் வெளியாகவில்லை. குறிப்பாக குஜராத், ராஜஸ் தான், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பத்மாவத் முழுமையாக திரையிடப்படவில்லை.

மேற்கு வங்கம், கோவா, அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கணிசமான தியேட்டர்களில் பத்மாவத் படம் திட்டமிட்டப்படி வெளியானது. இந்த மாநிலங்களில் பத்மாவத் படம் காட்டப்பட்ட தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களிலும் பத்மாவத் படம் வெளியாவதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த 5 மாநிலங்களிலும் 600 தியேட்டர்களில் பத்மாவத் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த 600 தியேட்டர்களிலும் இன்று காலை காட்சி தொடங்கி பத்மாவத் படத்தை ரசிகர்கள் எந்த இடையூறும் இல்லாமல் பார்த்து ரசித்தனர்.

மும்பையிலும் திட்டமிட்டப்படி பத்மாவத் படம் ரிலீஸ் ஆனது. மும்பையில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டதுடன், பத்மாவத் தியேட்டர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்திலும் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்மாவத் படத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ராஜபுத்திரர்கள் நடத்தும் போராட்டம் வடமாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

குஜராத், ராஜஸ்தானில் இன்று சில ஊர்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. #Padmaavat #Padmavat #DeepikaPadukone #ShahidKapoor #RanveerSingh