திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
நடிகை சமந்தா தயாரித்து, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமந்தா ஆக்ஷன் கதைக்களத்தில் இறங்கியுள்ளதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வெளியான 22 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் நாளை மறுநாள் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதனை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
சபரிமலை பின்னணியில், தொலைந்துபோன தனது மகனைத் தேடும் ஒரு தாயின் (சித்தாரா) பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு ‘சன்னிதானம் பி.ஓ’ எடுக்கப்பட்டுள்ளது. யோகி பாபு இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதனை சிம்பிளி சௌத் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, தர்ஷன் தூகுதீபாவின் 'தி டெவில்' திரைப்படம் நாளை மறுநாள் முதல் ஜீ5-ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
நெட்ஃபிக்ஸ் தளத்தின் புதிய கொரியன் தொடரான தி ஈஸ்ட் பேலஸ் (The East Palace), தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு நாளை மறுநாள் பிரத்தியேகமாக வெளியாகிறது. ஆன்மாக்களின் உலகிற்குச் செல்லும் ஆற்றல் கொண்ட ஒரு மனிதனும், இறந்தவர்களின் குரலைக் கேட்கும் அரசவை மங்கையும் இணைந்து அரண்மனையின் மர்மங்களை அவிழ்ப்பதே இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லரின் கதையாகும்
மத்திய தரைக்கடலில் அகதிகளைக் காப்பாற்றும் இளம் தன்னார்வலர்களைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட '23 000 Lives' திரைப்படம் நாளை மறுநாள் முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இதனை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.