OTT

பெத்தி முதல் பல்டி வரை... இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

பெத்தி

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 4 அன்று வெளியான திரைப்படம் ‘பெத்தி’. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தது.

இதனை தொடர்ந்து ‘பெத்தி’ திரைப்படம் நாளை மறுநாள் முதல் பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ‘பெத்தி’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

சிங் கீதம்

இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கிய சமீபத்தில் வெளியான திரைப்படமான 'சிங் கீதம்'. இசைத் திரைப்படமான இது, கடந்த மாதம் ஜூன் 12-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்நது ‘சிங் கீதம்’ படம் நாளை மறுநாள் முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பரிமளா & கோ

இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடிகர் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள ‘பரிமளா & கோ’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வருகிற 10-ந்தேதி முதல்ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜீ5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாக உள்ளது.

Land of Football

கேரள மக்களின் ரத்தத்தில் கலந்திருக்கும் கால்பந்து விளையாட்டின் மீதான தீராத காதலையும், அந்த மாநிலத்தின் தனித்துவமான விளையாட்டு கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மலையாள ஆவணத் தொடரான 'Land of Football', இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஹாசிப் ஹக்கீம் இயக்கியுள்ள இந்த ஆவணத் தொடர் வரும் 10-ந்தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

பல்டி (Balti)

மலையாளத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர் ஷேன் நிகம் நடிப்பில், கடந்த 2025 செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்த 'பல்டி' (Balti) திரைப்படம் தற்போது அதன் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் 10-ந்தேதி முதல் பிரபல ஓடிடி தளமான SonyLIV-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.