OTT

இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

கெணத்த காணோம்:

நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் 'கெணத்த காணோம்'. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை 'ஒரு கிடாவின் கருணை மனு', 'சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது பிரபல ஓ.டி.டி. தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. 'கெணத்த காணோம்' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்.

திரிஷ்யம் 3

மோகன்லால் நடித்த சஸ்பென்ஸ் திரில்லர் படமான 'திரிஷ்யம் 3' படம் கடந்த மே 21 திரையரங்குகளில் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, அவருக்கு மனைவியாக மீனாவும் நடித்துள்ளார். இப்படம் உலகளவில் ரூ.234.97 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.123 கோடிக்கு மேல் வசூலித்து இரண்டாவது அதிக வசூல் செய்த மலையாளப் படமாக இது திகழ்கிறது. இந்த நிலையில், ‘திரிஷ்யம் 3’ நாளை மறுநாள் முதல் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் காணலாம். ‘திரிஷ்யம் 3’ படத்தை மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் காணக்கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ வில் ஃபைண்ட் யூ (I Will Find You)

‘ஐ வில் ஃபைண்ட் யூ’ (I Will Find You) 8 அத்தியாயங்களைக் கொண்ட திரில்லர் தொடராகும். ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு நிரபராதியான தந்தை, கடத்தப்பட்ட தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கலாம் என்பதற்கான ஆதாரத்தைப் பெறுகிறார். உண்மையைக் கண்டறிய சிறையிலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும் அவரையே இந்த திரில்லர் தொடரின் அமையமாக உள்ளது. இத்தொடரை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நாளை மறுநாள் முதல் கண்டு மகிழலாம்.

ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்ஷன் (Husbands In Action)

ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்ஷன் என்பது தென்கொரிய நகைச்சுவை படமாகும். போதைப்பொருள் துப்பறிவாளரான நாயகன் போதைப்பொருள் மன்னனைப் பிடிக்கிறார். இதன்பிறகு நாயகனை பழிவாங்கும் நோக்கில் அவரது முன்னாள் மனைவி போதைப்பொருள் மன்னனால் கடத்தப்படும் போது கடத்தப்பட்ட பெண்ணின் முன்னாள், இன்னாள் கணவர்கள் இணைந்து பெண்ணை மீட்பதே நகைச்சுவை கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கொரியன், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 19-ந்தேதி முதல் கண்டு களிக்கலாம்.

அதிரடி (Athiradi)

அருண் அனிருதன் இயக்கத்தில் பேசில் ஜோசப், டோவினோ தாமஸ் மற்றும் வினீத் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான நகைச்சுவை படம் ‘அதிரடி’ . தனது கல்லூரியில் தடைசெய்யப்பட்ட கலாச்சார விழாவை மீண்டும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் ஒரு துடிப்பான சிவில் இன்ஜினியரிங் மாணவனின் முயற்சியானது, வேடிக்கையான மற்றும் குழப்பமான விளைவுகளுக்கு வழிவகுப்பதை இப்படத்தின் கதைக்களம் விவரிக்கிறது. இப்படத்தை வருகிற 19-ந்தேதி முதல் SonyLiv ஓ.டி.டி. தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.