ஓடிடி தளங்களில் இந்த வாரம் பல புதிய படங்கள், தொடர்கள் வெளியாகின்றன. கேஜெஆர் ராஜேஷ் நடித்த தடகள பின்னணியிலான ‘அங்கீகாரம்’ சன் நெக்ஸ்டில், அஷ்ரப் இயக்கி நடித்த மனோவியல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர் ‘போட்டோகிராபர்’ ப்ரைம் வீடியோவில் ஜூலை 25 முதல் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. மேலும் 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்கள், ஆங்கிலம், இந்தி படங்களும் வெளியாக உள்ளன.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மீரா கதிரவன் இயக்கத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘ஹபீபீ’ படம் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. மாளவிகா மனோஜ், தனாஸ்ரீ சுதாகரன், அருள்குமார், அனுஸ்ரேயை ராஜன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ள படம் வருகிற 25-ந்தேதி SonyLiv ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
தயாரிப்பாளர் கேஜெஆர் ராஜேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அங்கீகாரம்’. ஜே.பி. தென்பாதியான் இயக்கி உள்ள இப்படத்தில் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான படம் வருகிற 25-ந்தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
‘ரா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஷ்ரப் தற்போது ‘போட்டோகிராபர்’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். "சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்" பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கருணாகரன், ஆடுகளம் நரேன், "உறியடி" சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் சந்திரசேகன் இசை அமைத்துள்ளார். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், வருகிற 25-ந்தேதி முதல் ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.