பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகிராம் நகரில் அரசு பேருந்து கொளுத்தப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் பத்மாவத் படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சினிமா திரையரங்குகள் மற்றும் மல்ட்டிபிளெக்ஸ் அரங்கங்களின் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சங்கத்தில் நாட்டில் உள்ள 70 சதவீதம் திரையரங்குகள் மற்றும் மல்ட்டிபிளெக்ஸ் அரங்கங்களின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர், சுமார் 2 ஆயிரம் திரையரங்கள் இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த திடீர் முடிவு தொடர்பாக மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இச்சங்கத்தின் தலைவர் தீபக் அஷெர், ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் கோவாவில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் சாதகமாக இல்லாததால் பத்மாவத் படத்தை இந்த மாநிலங்களில் திரையிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எங்களைப் பொருத்தவரை ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம். தற்போதைய சூழ்நிலையில் நிலைமை பாதுகாப்பாக மாறிய பின்னர் மேற்கண்ட 4 மாநிலங்களிலும் படத்தை திரையிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட 4 மாநிலங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டும் சுமார் திரையரங்குகள் மற்றும் மல்ட்டிபிளெக்ஸ் அரங்கங்கள் இந்த சங்கத்தின்கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.