சினிமா

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதத்துக்கும் இவர் தான் காரணமாம்?

செல்வராகவன் இயக்கததில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் தாமதத்துக்கு காரணம் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. #NenjamMarappathillai

மாலை மலர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், படம் இன்னமும் ரிலீசாகவில்லை. படத்தின் ரிலீஸ் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் தரப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளரான க்ளோ ஸ்டூடியோசின் சித்தார்த் ராவ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த ஒரு வருடமாக படம் ரிலீஸ் தாமதம் குறித்து கேள்வி எழுப்பும் அனைவருக்கும் இதில் பதில் இருக்கிறது என்று கவுதம் மேனன் மீதான இயக்குநர் கார்த்திக் நரேனின் குற்றச்சாட்டை குறிப்பிட்டுள்ளார். 

கார்த்திக் நரேன் டுவீட்டில், `பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதிலிருந்து நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதத்திற்கும் கவுதம் மேனன் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

முன்னதாக அச்சம் என்பது மடமையடா படம் தாமதத்தால் கவுதம் மீது நடிகர் சிம்பு வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் படப்பிடிப்பை சரியான நேரத்தில் முடிக்காமல், கவுதம் மேனன் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என நடிகர் தனுஷ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் கவுதம் இயக்கும் துருவ நட்சத்திரம் படமும் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #NenjamMarappathillai