சினிமா

`நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் குறித்து மனம் திறந்த செல்வராகவன்

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸ் குறித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் மனம் திறந்திருக்கிறார்.

3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், டுவிட்டரில் ரசிகர்களுடனான கேள்விகளுக்கு பதிலளித்துள்ள செல்வ ராகவன், படம் தயாரிப்பாளரின் கையில் இருக்கிறது. வெகு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.