சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது காதல் மட்டும் மாறவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது காதலியை தேடிக்கொண்டே இருக்கிறார்.
தீபாவளி இரவில் ரெயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் நிவின் பாலிக்கு, பல ஆண்டுகளாக தேடி வரும் அஞ்சலி கனவில் தோன்றுகிறாள். அதே ரெயிலில் துபாயில் பல ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, சொந்த ஊர் திரும்புகிறார் சூரி. ரெயிலில் ஏறியதும் நிவின் பாலியை எழுப்பும் சூரி, அதன்பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்.
இதனால் இருவருக்கும் இடையே உருவாகும் மோதல்கள், உரையாடல்கள் என ரெயில் பயணம் சுவாரஸ்யமாக நகர்கிறது. இவர்களுடன் ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரமாக பயணிக்கிறது. இறுதியில் நிவின் பாலி தனது காதலியை கண்டுபிடித்தாரா? சூரி தனது ஊரை சென்றடைந்தாரா? என்பதே மீதிக்கதை.
வித்தியாசமான கதைக்களத்தையும், ஆழமான மனித உணர்வுகளையும் தனது தனித்துவமான பாணியில் சொல்லக்கூடியவர் இயக்குநர் ராம். அந்த வகையில், இந்தப் படத்திலும் காதல், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார்.
“இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பு.
நிவின் பாலி - சூரி இருவரும் சந்தித்த பிறகு நடக்கும் சம்பவங்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், திரைக்கதையின் வேகம் சில இடங்களில் குறைவதால் படத்தின் சுவாரஸ்யம் பாதிக்கப்படுகிறது.
இருப்பினும் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் நடிப்பு கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்குகிறது. இவர்களுடன் வரும் எலியும் படத்தில் தனி கவனம் பெறுகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே நேரத்தில், இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை அழகாக கடத்துகின்றன.