சத்தியவான் சாவித்திரி திரைப்படம் கீர்த்தி சுரேஷின் மனதளவிலான வலிமையை வெளிப்படுத்தும் நடிப்புடன், காதல், குடும்பம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை சுவாரஸ்யமாகச் சித்தரிக்கிறது. நீதிமன்றக் காட்சிகள் மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.
வழக்கறிஞர் தொழிலில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்தில் ஆர்வமில்லாமல் தனது கனவை நோக்கிப் பயணிக்கிறார். எதிர்பாராதவிதமாக ஐடி நிறுவனத் தலைவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் அவருக்கு, கணவன் மீது காதல் மலர்ந்து குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாகச் செல்கிறது.
தனது சீனியர் வழக்கறிஞரையே எதிர்த்து ஒரு கடினமான வழக்கில் வெற்றி பெறும் கீர்த்தி சுரேஷ், தொழிலில் முன்னேறினாலும், தொடர் வேலைப்பளு மற்றும் உடல்நல அலட்சியத்தால் வாழ்க்கையில் பெரும் சிக்கலைச் சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டு கணவனுடன் வாழ்க்கையைச் சீரமைக்க முயற்சிக்கும் நேரத்தில், கணவன் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார். இறுதியில் கணவனை காப்பாற்றி நிரபராதி என்பதை நிரூபிக்க கீர்த்தி சுரேஷ் மேற்கொள்ளும் சட்டப் போராட்டமே படத்தின் மீதிக்கதை.
சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், உற்சாகமான இளம்பெண்ணாகத் தொடங்கி வாழ்க்கையின் சோதனைகளைச் சந்தித்து மனதளவில் வலிமையான பெண்ணாக மாறும் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு படத்துக்கு முக்கிய பலம்.
மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிஷ்கின், தனது வழக்கமான உடல்மொழியுடன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். கணவராக நடித்துள்ள சாருகேசும் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். முதல் பாதியில் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என நிதானமாக நகரும் படம், இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றப் போராட்டமாக வேகம் எடுக்கிறது. முதல் பாதியில் சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வது சிறு குறையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் மர்மங்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழிலையும் சமமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தைப் பதிவு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.
நம்பிக்கை வைத்த இடத்திலிருந்தே துரோகம் வரும்போது ஏற்படும் வலி குறித்த வசனமும் கவனிக்க வைக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் காட்சிகளை சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பிரவின் எஸ்.விஜய்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு முதல் பாதியில் காதல் காட்சிகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறது. நீதிமன்றக் காட்சிகளிலும் காட்சியமைப்புக்கு ஏற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கும், பதற்றமான காட்சிகளுக்கும் வலு சேர்க்கின்றன. குறிப்பாக, இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம் படத்துக்கு நல்ல நிறைவைத் தருகிறது.
மொத்தத்தில், தொடக்கத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும், கீர்த்தி சுரேஷின் சிறப்பான நடிப்பு, சுவாரஸ்யமான நீதிமன்றப் போராட்டம், உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் என ரசிக்க வைக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது சத்தியவான் சாவித்திரி.