முதல் பாகத்தில் ‘பிளாஸ்டிக்’கின் தீமையை எடுத்துரைத்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன், இந்த முறை ‘ஆண்டிபயாடிக்’ எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் வருங்காலத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி கவனம் ஈர்த்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த உளவாளியான கார்த்தி, நாட்டுக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்து தேசத்துரோகி என்ற பட்டத்தை வாங்கிக் கொள்கிறார். இந்தநிலையில் நாட்டுக்கு ஒரு ஆபத்து ஏற்பட 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியுலகுக்கு தனது முகத்தை காட்டுகிறார். தனது மகனுடன் சேர்ந்து அந்த சதித்திட்டத்தை முறியடித்து செல்வது போல 'சர்தார்' முதல் பாகம் முடிந்திருந்தது. அதிலிருந்து தொடங்குகிறது 2-ம் பாகம்.
ரகசிய உளவாளியான அச்யுத்குமாரை ராணுவ அதிகாரிகள் தேடி வரும் சூழலில், கார்த்தி அவரை நெருங்குகிறார். அப்போது அவரிடம் ஒரு சாவியை கொடுத்துவிட்டு அச்யுத்குமார் உயிரிழக்கிறார். அந்த சாவியின் பின்னணியை ஆராய தொடங்கும் கார்த்திக்கு, இதேபோல மேலும் 2 சாவிகள் உள்ளன என்றும், அந்த சாவிகளை கொண்டு பேரழிவை உண்டாக்கும் ஒரு அணு ஆயுதத்தை திறக்கலாம் என்ற உண்மையும் தெரியவருகிறது. அதேவேளை இந்த அணு ஆயுதத்தை தேடி நிழல் உலக கூலிப்படை தலைவனான எஸ்.ஜே.சூர்யா வருகிறார். 1981-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பேரிழிவை மீண்டும் செயல்படுத்த துடிக்கிறார். மனித குலத்தை அழிக்க எஸ்.ஜே.சூர்யா துடிப்பது ஏன்? அவரது திட்டத்தை கார்த்தி முறியடித்தாரா, இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை.
தந்தை, மகன் என்ற இரு வேறு கதாபாத்திரங்களில் மாறுபட்ட நடிப்பை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார் கார்த்தி. 'சர்தார்' ஆக எதிரிகளிடம் அவர் ஆடும் தாண்டவம் பரபரப்பின் உச்சம்.
அழகால் வசியப்படுத்தும் மாளவிகா மோகனன் ரகசிய ஏஜெண்டாக ஆக்ஷன் மோடில் கலக்கியிருக்கிறார். ஆஷிகா ரங்கநாத்தின் அளவான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. எஸ்.ஜே.சூர்யா மிரட்டிவிட்டார். சிரிப்பும். அழுகையும் கலந்து அவர் நடிக்கும் இடங்கள் 'அடடா' ரகம். நாசர், அவினாஷ், பாபு ஆண்டனி, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோரின் நடிப்பும் ரசிப்பு.
ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. தனது 100-வது படம் என்பதால் சாம் சி.எஸ். புகுந்து விளையாடி இருக்கிறார். நீளமான படம் என்றாலும் தேவையான காட்சிகளாக தொகுத்திருப்பதில் விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் கவனம் ஈர்க்கிறது.
கதாபாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு படத்தின் பலம். ‘எமோஷனல்’ ரீதியான காட்சிகள் ‘கனெக்ட்’ ஆகவில்லை. ‘லாஜிக் மீறல்’களும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. பல காட்சிகளை யூகிக்க முடிகிறது.
முதல் பாகத்தில் ‘பிளாஸ்டிக்’கின் தீமையை எடுத்துரைத்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன், இந்த முறை ‘ஆண்டிபயாடிக்’ எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் வருங்காலத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி கவனம் ஈர்த்துள்ளார்.
சர்தார்-2 : விழிப்புணர்வு.