தரவரிசை

பனி விழும் இரவு- திரை விமர்சனம்

சில காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் அமைத்திருந்தால் படத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகரித்திருக்கும்.

சினிமா செய்திப்பிரிவு

கொடைக்கானலில் பிரீ வெட்டிங் ஷூட்டிற்குச் சென்ற அருண் கார்த்தி, எனாக்‌ஷி காணாமல் போகும் மர்மத்தில் சிக்குகிறார். இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் தலைமையில் விசாரணை தொடங்க, பல திருப்பங்களுடன் மர்மம் வெளிப்படுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற கதை அமைப்பு.

கதை

திருமணத்திற்குத் தயாராகும் அருண் கார்த்தி, எனாக்‌ஷி கங்குலி இருவரும் தங்களது பிரீ வெட்டிங் ஷூட்டிற்காக கொடைக்கானலில் உள்ள ஒரு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கு திடீரென எனாக்‌ஷி கங்குலி காணாமல் போக, அதிர்ச்சியடையும் அருண் கார்த்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ், கான்ஸ்டபிள் கருப்பு நம்பியார் ஆகியோர் விசாரணையில் இறங்குகின்றனர். விசாரணையில் பல மர்மங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. உண்மையில் காணாமல் போனது யார்? பின்னணியில் இருப்பது என்ன? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் கார்த்தி, காதல், தவிப்பு, ஏக்கம், பதற்றம் எனப் பல்வேறு உணர்வுகளை தனது இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகி எனாக்‌ஷி கங்குலி, கதையின் மர்மத்துடன் தொடர்புடைய அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் மதிமாறனாக வரும் சேரன்ராஜ், அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கருப்பு நம்பியார், சரவணசக்தி, செ.ரா. ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

சதாமுருகன் இசையமைத்திருக்கிறார். கதையின் மர்மத்தன்மைக்கு ஏற்ற பின்னணி இசை, குறிப்பாக பரபரப்பான காட்சிகளில் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல், கொடைக்கானலின் இயற்கை அழகையும், மர்மம் நிறைந்த பங்களாவின் சூழலையும் அழகாகப் படமாக்கியிருக்கிறார்.

இயக்குநர் செ.ரா. ராஜேஷ் ஆரம்பம் முதலே மர்மத்தை உருவாக்கி, அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் கதையை நகர்த்தியிருப்பது படத்தின் பலம். குறிப்பாக, யூகிக்க முடியாத சில திருப்பங்களும், இறுதிவரை நீடிக்கும் மர்மமும் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

SCROLL FOR NEXT