தரவரிசை

நிறம்- திரைவிமர்சனம்

கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் முகேன் ராவ்.

சினிமா செய்திப்பிரிவு

பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரீத்தி அஸ்ரானியின் துணிச்சலான முயற்சிகள், காதல், மாயம் மற்றும் மர்மம் நிறைந்த திரைக்கதையாக 'நிறம்' உருவாகியுள்ளது. இயக்குனர் பலராம் கிருஷ்ணா சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வலிமையான செய்தியை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

கதை

மருத்துவக் கல்லூரி மாணவியான பிரீத்தி அஸ்ரானியை, டாக்டர் முகேன் ராவ் காதலிக்கிறார். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளையும், வன்கொடுமைகளையும் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் துணிச்சலுடன் குரல் கொடுப்பது பிரீத்தி அஸ்ரானியின் வழக்கம். இதனால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் அவருக்கும், முகேன் ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் முறிகிறது.

இந்தச் சூழலில் திடீரென பிரீத்தி அஸ்ரானி மாயமாகிறார். அவரைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு முகேன் ராவ் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். உண்மையில் பிரீத்திக்கு என்ன நடந்தது? இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் கதை நகர்கிறது.

இயக்குனர்

செல்போனை வெறும் பொழுதுபோக்குக்கான சாதனமாக மட்டும் பார்க்காமல், சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தலாம் என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பலராம் கிருஷ்ணா.

நடிகர்கள்

கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் முகேன் ராவ். துணிச்சலும் சமூக அக்கறையும் கொண்ட மாணவியாக வரும் பிரீத்தி அஸ்ரானி தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். தான்யா ஹோப், சுரேகா வாணி, கஜராஜ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

குறிப்பாக, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் நிதின் சத்யா. அதிரடியான சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டி ரசிகர்களைக் கவர்கிறார். மருத்துவக் குற்றப் பின்னணியிலான கதைக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சான்டோனியோ டெர்சியோ. இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மொத்தத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரலைப் பதிவு செய்யும் முயற்சியில் கவனம் ஈர்க்கிறது ‘நிறம்’.

SCROLL FOR NEXT