தரவரிசை

மௌன மொழிகள் - திரை விமர்சனம்

ஒரு சில கதாபாத்திரங்களின் நடிப்பில் நாடகத்தன்மை வெளிப்படுவது படத்தின் பலவீனம். ரிஷாவின் குத்தாட்டம் திரையில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

சினிமா செய்திப்பிரிவு

மௌன மொழிகள் திரைப்படம் அழகை மையமாகக் கொண்ட காதல் கதையை விவரிக்கிறது. விபத்துக்குப் பிறகு காதலின் உண்மையான ஆழத்தை சோதிக்கும் சூழலில், கதாநாயகன் ஷாகிர் மற்றும் அர்ச்சனா சிங்கின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறது. நடிப்பில் இயல்பும், சில இடங்களில் நாடகத்தன்மையும் வெளிப்படுகிறது.

கதை

ஷாகிர் மனோவும் அவரது நண்பர் அர்ஜுனனும் இணைந்து விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்குகின்றனர். தங்களது நிறுவனத்தின் மூலம் சோப்பு விளம்பரம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டு, அதில் நடிப்பதற்கு அழகான பெண்ணைத் தேடி அலைகின்றனர்.

அப்போது சென்னையில் நடைபெறும் அழகிப் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்ததாக இந்திய அழகிப் போட்டியில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் அர்ச்சனா சிங்கைச் சந்திக்கிறார் ஷாகிர். அவரைத் தங்களது சோப்பு விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆரம்பத்தில் மறுக்கும் அர்ச்சனா சிங்கின் அழகில் மயங்கும் ஷாகிருக்கு, நாளடைவில் அவர் மீது காதல் மலர்கிறது. இந்தச் சூழலில் எதிர்பாராதவிதமாக அர்ச்சனா சிங்கிற்கு விபத்து ஏற்பட்டு முகத்தில் பலத்த காயம் உண்டாகிறது. அழகைக் கண்டு காதல் கொண்ட ஷாகிர், அந்த விபத்துக்குப் பிறகும் தனது காதலைத் தொடர்ந்தாரா? இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

பாடகர் மனோவின் மகன் ஷாகிர் கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ச்சனா சிங்கின் அழகில் மயங்கி காதல் கொள்ளும் காட்சிகளிலும், அவரை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காகச் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அர்ச்சனா சிங் அழகாகத் தோன்றி ரசிகர்களைக் கவர்கிறார். இரண்டாவது கதாநாயகனாக வரும் பி. ஸ்ரீமன், திவ்யா நாகேஷ், அர்ஜுன், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு சில கதாபாத்திரங்களின் நடிப்பில் நாடகத்தன்மை வெளிப்படுவது படத்தின் பலவீனம். ரிஷாவின் குத்தாட்டம் திரையில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

நல. இளந்திரையன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எம்.ஜி. ராய் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட காதல், விபத்துக்குப் பிறகு அந்தக் காதலின் உண்மையான ஆழத்தை உணர்த்துகிறதா என்ற கேள்வியை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் ஏசி.சவுந்தர்.

SCROLL FOR NEXT