நயன்தாராவின் அம்மன் அவதாரம், ரெஜினாவின் வில்லத்தனம், மற்றும் பிரமாண்ட காட்சிகள் மூலம் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பக்தி, மிரட்டல், நகைச்சுவை என பல அம்சங்களை இணைத்து ரசிகர்களை ஈர்க்கிறது. சுந்தர் சி. இயக்கத்தில், கதையின் மர்மம், தீய சக்திகளுக்கு எதிரான போராட்டம், மற்றும் தொழில்நுட்ப காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.
பெண் போலீசாக இருக்கும் நயன்தாராவுக்கு அடிக்கடி விசித்திரமான கனவு வருகிறது. கனவில் தோன்றும் சில அரக்கர்கள், மயிலாஞ்சி என்ற ஊருக்கு வரும்படி அவரை அழைக்கிறார்கள். கனவுகளால் ஒருவித குழப்பத்திலும் மன உளைச்சலிலும் இருக்கிறார் நயன்தாரா.
ஒரு கட்டத்தில் விருப்பப் பணி மாறுதல் பெற்றுக்கொண்டு தனது தாய் ஊர்வசியுடன் அந்த ஊருக்கு வருகிறார் நயன்தாரா. அவர் வந்திருப்பதை அறியும் ரெஜினா, நயன்தாராவை பழிவாங்கத் துடிப்பதுடன், அவரைப் பலிகொடுக்கவும் திட்டமிடுகிறார். தீய சக்திகள் நயன்தாராவை நெருங்கும் போதெல்லாம் அவருக்குள் சில விசித்திரமான மாற்றங்களும் அதிர்வுகளும் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் நயன்தாரா யார் என்ற உண்மை வெளிப்படத் தொடங்குகிறது. இதையடுத்து, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் திரையில் விரிகின்றன.
ஊர் மக்களைக் காப்பாற்றும் தெய்வமாக மூக்குத்தி அம்மன் மீண்டும் அவதாரம் எடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால், தனது உண்மையான அடையாளமே தெரியாமல் இருக்கும் நயன்தாராவை ரெஜினா கசாண்ட்ரா ஏன் கொலை செய்யத் துடிக்கிறார்? அவரது பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை.
பெண் போலீசாக அப்பாவித்தனமும் இயல்பான தோற்றமும் கொண்டு வலம் வரும் நயன்தாரா, அம்மனாக அவதாரம் எடுக்கும் தருணங்களில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறார்.
குறிப்பாக, சூலம் ஏந்தி கம்பீரமாக நிற்கும் காட்சிகளிலும், தீய சக்திகளுக்கு எதிராகச் சீறிப்பாயும் தருணங்களிலும் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறார்.
படத்தின் இன்னொரு பலமாக அமைந்திருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. வில்லத்தனமான பார்வை, ஆவேசமான உடல்மொழி, தீப்பிழம்பாகச் சுடும் கண்கள் என ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார்.
ஊர்வசி தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன.
இனியா, துனியா விஜய், சிங்கம் புலி, சுனில், மைனா நந்தினி, வர்ஷினி, நிதின் சத்யா உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் குஷ்பு, சினேகா ஆகியோரும் குறைவான காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஹிப் ஹாப் தமிழாவின் இசையும் பின்னணி இசையும் கதையின் வேகத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன.
கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் பெரிய பலம். அமானுஷ்யக் காட்சிகள், அம்மனின் சக்தியை வெளிப்படுத்தும் தருணங்கள், சண்டைக் காட்சிகள் எனப் பல இடங்களில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு தெரிகிறது.
முதல் பாதியில் கதையின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வதும், நயன்தாராவின் உண்மையான அடையாளத்தை நோக்கிக் கதை நகர்வதும் சுவாரசியமாக இருக்கிறது.
இருப்பினும், அம்மன் அவதாரம், தீய சக்திகளுக்கு எதிரான போராட்டம், பிரமாண்டமான காட்சியமைப்பு என ரசிகர்களைத் தொடர்ந்து படத்துடன் பயணிக்க வைக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.
முதல் பாகத்தின் கதைக்களத்தையும் பாணியையும் அப்படியே தொடராமல், இரண்டாம் பாகத்தை முற்றிலும் வேறுபட்ட களத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
நயன்தாராவின் அம்மன் அவதாரம், ரெஜினாவின் வில்லத்தனம், ஊர்வசியின் நகைச்சுவை, பிரமாண்டமான காட்சிகள் எனப் பல அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில், பக்தி, மிரட்டல், நகைச்சுவை, பிரமாண்டம் என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது ‘மூக்குத்தி அம்மன் 2'.