நடிகர் விஷால் 
தரவரிசை

மகுடம்- திரைவிமர்சனம்

சாதுவான, குடும்பத்திற்காக போராடும் மகன் கதாபாத்திரத்தில் அனுதாபத்தை அள்ளும் அவர், மறுபுறம் மிகப்பெரிய டான் கதாபாத்திரத்தில் மிரட்டலான ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுகிறார்.

Maalaimalar

துஷாரா விஜயனின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் அஞ்சலி தனக்கான இடத்தை அழுத்தமாக பதிவு செய்கிறார்.

கதை

‘மகுடம்’ படத்தின் மையமே தந்தை-மகன் என இரு வேடங்களில் விஷால் காட்டும் வித்தியாசமான பரிமாணம்தான். குடும்ப பாசம், பழிவாங்குதல், ஆக்ஷன் என அனைத்தையும் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படம், விஷாலின் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களாக தனது குடும்பம் கனவு கண்ட கார் வாங்கும் ஆசை ஒரு வழியாக பழைய கார் ஒன்றை வாங்கியதன் மூலம் நிறைவேறுகிறது. அந்தக் காரில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது, திடீரென மர்ம கும்பல் ஒன்று காரை வழிமறித்து, துஷாரா விஜயன் மற்றும் அவரது மகளை கொலை செய்கிறது.

மகனுடன் காட்டுக்குள் தப்பிச் செல்லும் விஷால், ஒரு கட்டத்தில் தன்னைத் துரத்தி வரும் எதிரிகளை எதிர்த்து ஆக்ரோஷமாக களமிறங்குகிறார். அப்போது, “இதற்கெல்லாம் காரணம் தனது தந்தையின் பின்னணி தான் என தெரிய வருகிறது. விஷாலின் தந்தை யார்? அவரது பின்னணி என்ன? என்பதற்கான விடைகளே படத்தின் மீதிக் கதை.

நடிகர்கள்

தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களிலும் விஷால் சிறப்பான வித்தியாசம் காட்டியிருக்கிறார். சாதுவான, குடும்பத்திற்காக போராடும் மகன் கதாபாத்திரத்தில் அனுதாபத்தை அள்ளும் அவர், மறுபுறம் மிகப்பெரிய டான் கதாபாத்திரத்தில் மிரட்டலான ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுகிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் விஷாலின் வேகம், உடல்மொழி, அதிரடி என அனைத்தும் ரசிகர்களை கவர்கின்றன.

துஷாரா விஜயனின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் அஞ்சலி தனக்கான இடத்தை அழுத்தமாக பதிவு செய்கிறார். அவரது முடிவு பரிதாபத்தை வரவழைக்கிறது. பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்த ஜான் விஜய் இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. ஜெய பிரகாஷ் மற்றும் பல கதாபாத்திரங்களில் நடிப்பு கூடுதல் பலம்.

தொழில்நுட்ப குழு

ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தையும் ஆக்‌ஷன் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை கதையோடு இணைந்து பயணிக்கிறது.

தந்தை-மகன் மோதல், பழிவாங்கும் கதை என்ற பழக்கமான களமாக இருந்தாலும், அதில் புதுமையான காட்சிகளையும் அதிரடியான திரைக்கதையையும் இணைத்து படத்தை சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் விஷால். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். மொத்தத்தில் மகுடம் படம் ஆக்‌ஷன், சென்டிமென்ட், பழிவாங்கும் படலம் என விஷால் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து.